மாநிலங்களவையில் வைகோவின் முதல் கேள்வி - ஸ்மிருதி இரானி பதில்
மாநிலங்களவையில் தனது முதல் கேள்விக்கு அமைச்சரின் பதில் திருப்தி அளிக்காததால் எம்.பி வைகோ அதிருப்தி அடைந்தார்.
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வான எம்பிக்கள் 6 பேரும் இன்று பதவியேற்று கொண்டனர். தமிழகத்தில் இருந்து அதிமுக சார்பில் தேர்வான சந்திரசேகரன், முகமது ஜான் ஆகியோர் எம்.பியாக பதவியேற்று கொண்டனர். அதிமுக கூட்டணியில் பாமகவை சேர்ந்த அன்புமணி ராமதாஸ் எம்.பியாக பதவியேற்றுக்கொண்டார். திமுகவை சேர்ந்த சண்முகம், வில்சன் ஆகியோரும் பதவியேற்றுக் கொண்டனர்.
மேலும் திமுக கூட்டணியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பியாக பதவியேற்றுக் கொண்டார். 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மாநிலங்களவை எம்.பியாக பதவியேற்றார் வைகோ. அப்போது வைகோவின் பெயர் அறிவிக்கப்பட்டபோது உறுப்பினர்கள் கைதட்டி உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
இந்நிலையில், இந்தியாவில் மூடப்பட்ட நூற்பு ஆலைகள் பற்றி மாநிலங்களவையில் தனது முதல் கேள்வியை வைகோ எழுப்பினார். சீனாவில் இருந்து இறக்குமதியாகும் ஆயத்த ஆடைகளால் இந்தியாவில் உள்ள நூற்பு ஆலைகள் பாதிக்கப்படுவதாகவும் குற்றஞ்சாட்டினார்.
இதற்குப் பதிலளித்து பேசிய அமைச்சர் ஸ்மிருதி இரானி சீனாவில் இருந்து ஆயத்த ஆடைகள் இறக்குமதியாகவில்லை எனத் தெரிவித்தார். இதையடுத்து அமைச்சரின் பதிலில் திருப்தி இல்லை என வைகோ தனது அதிருப்தியை வெளிப்படுத்தி உரையை நிறைவு செய்தார்.

