வழக்கு முடிவதாய் இல்லை: ஜாமின் கோருகிறார் வைகோ
தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 50 நாள் சிறைவாசத்துக்குப் பிறகு வைகோ ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.
2009 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக கூறி வைகோ மீது தேசத்துரோக வழக்கு தொடர்ப்பட்டது. இந்த வழக்கு விசாரணை ஏப்ரல் 3 ஆம் தேதி, எழும்பூர் நீதிமன்றத்தில் வந்தபோது வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் இல்லையேல் தன்னை கைது செய்ய வேண்டும் என்று தானாக முன் வந்து வைகோ மனு செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி கோபிநாத் வைகோவுக்கு ஜாமின் வழங்க முன் வந்தார். ஆனால் ஜாமின் பெற மறுத்த வைகோ சிறைக்குச் சென்றார். தொடர்ச்சியாக வந்த இரண்டு விசாரணைகளிலும் ஜாமின் பெற மறுத்து வைகோ கடந்த 50 நாட்களுக்கும் மேலாக புழல் சிறையில் உள்ளார்.
இந்த நிலையில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமின் கோரி வைகோ தரப்பில் இன்று மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அடுத்த மாதம் நடைபெற உள்ள பிணாங்கு துணை முதல்வர் ராமசாமியின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்பதற்கு மலேசியா செல்ல வேண்டி இருப்பதால் வைகோ ஜாமின் கோரி இருக்கலாம் என்று மதிமுக வட்டாரங்களில் கூறப்படுகிறது. முன்னதாக வழக்கு முடியாமல் சிறையை விட்டு வர மாட்டேன் என்றும், ஈழத்தமிழர் பிரச்சனையில் திமுகவின் துரோக்கத்தை இன்றைய இளம் தலைமுறைக்கு உணர்த்தமே ஜாமின் கேட்காமல் சிறைக்கு செல்கிறேன் என்று வைகோ கூறினார் குறிப்பிடத்தக்கது

