ஜல்லிக்கட்டு விஷயத்தில் முதலமைச்சர் பொறுப்போடு பதில் சொல்கிறார் என வைகோ கருத்துத் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பிரதமரைச் சந்தித்த வைகோ, ஜல்லிக்கட்டு விஷயத்தில் மத்திய அரசால் எதுவும் செய்ய முடியாது என பிரதமர் கூறியதாகத் தெரிவித்தார்.
இந்நிலையில் சங்கரன் கோவிலில் செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, பிரதமர் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நினைப்பதாகக் கூறியுள்ளார். தமிழகத்தில் இந்த அரசுக்கு எந்த வகையில் கேடு விளைவிக்கலாம் என பலர் திட்டமிட்டுக் கொண்டிருப்பதாகவும் வைகோ அச்சம் தெரிவித்தார்.
2011ல் ஜூலை 11ல் வீட்டில் இருந்த செல்லப் பிராணிகளை மிருகங்கள் பட்டியலில் கொண்டு போய் சேர்த்தது திமுக அமைச்சர்கள் பங்கேற்ற காங்கிரஸ் ஆட்சியில்தான் என்று வைகோ தெரிவித்தார். மாணவர்கள் போராட்டத்திற்கு யாரும் ஆதரவு தெரிவிக்க வேண்டியதில்லை. இது அவர்களாக நடத்துகிற போராட்டம். அந்த போராட்டக் களத்தில் ஈடுபட்டிருக்கிற மாணவ சமுதாயத்திற்கு தமிழினம் நன்றி கடன்பட்டிருக்கிறது என்றும் வைகோ கூறினார்.