வைகை அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றம் - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

வைகை அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றம் - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
வைகை அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றம் - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை


இந்த ஆண்டில் மூன்றாவது முறையாக வைகை அணை நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.கரையோர மக்களுக்கு மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உபரிநீர் வைகை ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து வினாடிக்கு 2350 கன அடி நீர் வைகை அணைக்கு திறந்துவிடப்பட்டது. மேலும் வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான மேகமலை, வெள்ளிமலை, வருஷநாடு உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்ததன் மூலமாகவும், வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் வைகை அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தது.

இதன் காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்தது.கடந்த 6ஆம் தேதி வைகை அணையின் நீர்மட்டம் 66 அடியை எட்டியதையடுத்து கரையோர மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.இந்த நிலையில் நேற்று காலை வைகை அணையின் நீர்மட்டம் 68.5 அடியை எட்டியதால் இரண்டாவது கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு 10 மணிக்கு வைகை அணை நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் கரையோர மக்களுக்கு மூன்றாவது கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வைகை அணையில் இருந்து வினாடிக்கு 1000 கனஅடி உபரிநீர் வைகையாற்றில் திறக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 69.26 அடியாகவும், வைகை அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 3457 கனஅடியாகவும் அதிகரிப்பதால், தற்போது வைகை அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு வினாடிக்கு 2569 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.இதனால் வைகை ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்கும்படி பொதுப்பணித் துறையின் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் வைகை அணை மூன்றாவது முறையாக முழு கொள்ளளவை எட்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com