2015 ஆம் ஆண்டிற்கு பிறகு வைகை அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
வைகை அணையிலிருந்து பாசனத்திற்காக வெளியேற்றப்படும் தண்ணீரை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, ஆர்பி உதயகுமார் உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்றனர். 2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு வைகை அணை பாசனத்திற்காகத் திறக்கப்பட்டுள்ளது. கம்பம் பள்ளத்தாக்கு, பெரியாறு பிரதான கால்வாய் பாசனப் பகுதியின் கீழ் முதல் போக பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு விநாடிக்கு 900 கன அடி வீதம், 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வைகை அணை திறக்கப்பட்டுள்ளதன் மூலம், மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் 45,041 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

