கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடந்து முடிந்த வடபழனி முருகன் கோயில் குடமுழுக்கு விழா

கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடந்து முடிந்த வடபழனி முருகன் கோயில் குடமுழுக்கு விழா
கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடந்து முடிந்த வடபழனி முருகன் கோயில் குடமுழுக்கு விழா

வடபழனி முருகன் கோயிலில் குடமுழுக்கு விழா கொரோனா கட்டுப்பாடுகளுடன் இன்று நடைபெற்றது. 108 சிவாச்சாரியார்கள், அர்ச்சகர்கள், கோயில் பணியாளர்கள் மட்டும் கலந்து கொண்ட குடமுழுக்கு விழா இணையம், தொலைக்காட்சி மூலம் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.

தமிழ் கடவுள் என்றழைக்கப்படும் முருகனின் புகழ்பெற்ற தலமாக விளங்கும் வடபழனி முருகன் கோவிலின் இன்று குடமுழுக்கு விழா நடைபெற்றது. ஆகம விதிப்படி கும்பாபிஷேகம் நடைபெற்று முடிந்த கோயில்களுக்கு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு நடைபெற வேண்டும். அதன்படி இதற்கு முன் 2007 ஆம் ஆண்டில் குடமுழுக்கு நடைபெற்றது. பின்னர் தற்போது நடத்தப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 2.56 கோடி செலவில் கடந்த 2020-ம் ஆண்டு பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் தொடங்கப்பட்டது.

கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கில் கோவில் மூடப்பட்டதால் கோயில் புணரமைப்பு பணிகள் தாமதமானது. இந்நிலையில் திமுக அரசு பொறுப்பேற்ற பின், அமைச்சர் சேகர் பாபு 2022 தொடக்கத்தில் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் என தெரிவித்திருந்தார். குடமுழுக்கு விழா நிகழ்ச்சிகள் கடந்த 17ம் தேதி தொடங்கிய நிலையில், நாள் தோறும் சிறப்பு யாகம், பூஜைகள் நடைபெற்றது. சரியாக 9:30 மணிக்கு கோபுர கலச பூஜைகள் தொடங்கியுள்ளது. 108 சிவாச்சாரியார்கள், அர்ச்சகர்கள் மந்திரம் ஓத அறுபடை வீடுகள், முக்கிய கோவில்கள், ஜீவ நதிகளின் புண்ணிய தீர்த்தமும் கோபுர கலசங்களில் தெளிக்கப்படுகிறது. குடமுழுக்கு விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு துறையின் முதன்மைச் செயலாளர் ஆணையர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக அர்ச்சகர்கள், அர்ச்சகர்களின் உதவியாளர்கள், திருக்கோவில் பணியாளர்கள், நன்கொடையாளர்கள், நகரத்தார்கள், உபயதாரர்கள் என குறிப்பிட்ட நபர்களை மட்டும் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். குடமுழுக்கு விழாவை ஒட்டி 21 லட்சம் மதிப்பில் புதிய வேல் முருகனுக்கு சாத்தப்பட்டது. 5 லட்சம் ரூபாய் மதிப்பில் வெள்ளி விளக்குகளும் கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டது. குடமுழுக்கு நிகழ்வு முழுமையாக இணையத்திலும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.

குடமுழுக்கு முடிந்த பின்னர் கோவில் கலச தீர்த்தங்களை வாங்குவதற்காக 3 கோபுர வாசல்களிலும் பொதுமக்கள் குவிந்தனர். மோட்டார் மூலம் குடமுழுக்கு தீர்த்தம் கோவில் வளாகம் சுற்றி பொதுமக்கள் மீது தெளிக்கப்பட்டது. பின்னர் காவல்துறையினர் அறிவுறுத்தலின் பேரில் சிறிது நேரத்தில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். குடமுழுக்கு பூஜைகள் முடிந்து 48 நாட்கள் மண்டல பூஜைகள் நடைபெறும் நிலையில், கொரோனா வழிகாட்டுதல் படி வரும் நாட்களில் மக்கள் தரிசிக்கலாம் என இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com