வடக்கம்பட்டி முனியாண்டி கோவில் பிரியாணி திருவிழா – சுடச் சுட பிரசாதமாக வழங்கப்பட்ட மட்டன் பிரியாணி

திருமங்கலம் அருகே நடைபெற்ற முனியாண்டி கோவில் பிரியாணி திருவிழாவில் 100க்கும் மேற்பட்ட ஆடுகள், 200க்கும் மேற்பட்ட சேவல்கள், 3000 கிலோ அரிசி கொண்டு பிரியாணி செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
Briyani Festival
Briyani Festivalpt desk

செய்தியாளர் - செ.சுபாஷ்

மதுரை திருமங்கலம் அருகே உள்ள வடக்கம்பட்டி கிராமத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீமுனியாண்டி சுவாமி திருக்கோவிலில் ஆண்டுதோறும் தை மற்றும் மாசி மாதம் வரும் இரண்டாவது வெள்ளிக்கிழமைகளில் இருவேறு சமூகத்தினர் வெகு விமர்சையாக பிரியாணி திருவிழா நடத்துவது வழக்கம்.

Brfiyani festival
Brfiyani festivalpt desk

அப்படி 89-வது ஆண்டாக நடைபெறும் இந்த ஆண்டு பிரியாணி திருவிழாவிற்காக பக்தர்கள் கடந்த ஒருவாரமாக காப்புகட்டி விரதம் மேற்கொண்டனர். இதையடுத்து விரதம் மேற்கொண்ட பக்தர்கள் வெள்ளிக்கிழமை காலை ஊர்வலமாக பால்குடம் சுமந்துவந்து, அந்தப் பாலை சுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். இதைத் தொடர்ந்து மாலை நடைபெற்ற விழாவில் கோவில் நிலை மாலையுடன் கிராம இளைஞர்கள் ஆட்டம் பாட்டத்துடன் ஊர்வலமாக வந்தனர்.

அதேபோல் பெண் பக்தர்கள் தேங்காய், பழம், பூந்தட்டுகளை தலையில் சுமந்தபடி ஊர்வலமாக வந்து நிலை மாலையை கோவிலில் வைத்து சுவாமிக்கு தேங்காய் உடைத்து பூஜையுடன் சாமி தரிசனம் செய்தனர். இந்த விழாவிற்கு தமிழகம், ஆந்திரா கேரளா உள்ளிட்ட பல இடங்களில் ஸ்ரீமுனியாண்டி விலாஸ் ஹோட்டல் நடத்தி வருபவர்கள் மற்றும் உள்ளுர் வெளியூர் மக்கள் உட்டபட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

briyani festival
briyani festivalpt desk

விழாவின் நிறைவாக பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 100க்கும் மேற்பட்ட ஆடுகள் மற்றும் 200க்கும் மேற்பட்ட சேவல்களை முனியாண்டி சுவாமிக்கு பலியிட்டனர். தொடர்ந்து 3000 கிலோ பிரியாணி அரிசியில் அண்டா அண்டாவாக அதிகாலை முதலே பிரியாணி தயார் செய்தனர். இதையடுத்து சனிக்கிழமையான இன்று காலை பிரியாணி கருப்பசாமிக்கு படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஏற்கனவே அண்டாக்களில் தயாராக வைக்கப்பட்டிருந்த பிரியாணி சுடச் சுட பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com