தடுப்பூசி தட்டுப்பாடு: 3-வது நாளாக ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற மதுரை மக்கள்
மதுரை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லாத காரணத்தினால் பொதுமக்களுக்கு 3வது நாளாக இன்றும் தடுப்பூசிகள் செலுத்தப்படவில்லை. இதனால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
மதுரை மாவட்டத்தில் இதுவரை 3,73,769 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 18 முதல் 45 வயதுக்குட்பட்டோர் சுமார் ஒன்றரை லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் 100 மையங்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்த நிலையில் தடுப்பூசி இல்லாததால் முகாம்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகிறது.
இந்நிலையில், இன்று 3-வது நாளாக தடுப்பூசி செலுத்தப்படாத நிலையில் தடுப்பூசி செலுத்தவந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். இன்று இரவுக்குள் தடுப்பூசி வரும் பட்சத்தில் நாளை முதல் தடுப்பூசி செலுத்தப்படும் என மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.