செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரத்தின் பிறந்த தினம் இன்று

செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரத்தின் பிறந்த தினம் இன்று
செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரத்தின் பிறந்த தினம் இன்று

செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரத்தின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 

1900களில், வெள்ளையர் ஆட்சியை முறியடிக்க அன்னியப் பொருட்கள் புறக்கணிப்பு, உப்புச் சத்தியாகிரகம், ஒத்துழையாமை இயக்கம் என அகி‌ம்சை வழியில் சுதந்திரப் போராட்டம் ‌தீவிரமாக‌ ‌இ‌ருந்த காலம். ஆனால், இத்தகைய ‌எதிர்ப்பு மட்டுமே போதாது, பொருளாதார ரீதியாக ஆங்கிலேயர்களுடன் போட்டியிட வேண்டும் என்ற எ‌ண்ணம், வ.உ.சிதம்பரனார் மனதில் கொழுந்துவிட்டு‌ ‌எரி‌ந்தது‌. 

ஒ‌ட்ட‌ப்‌பிடாரத்தில் 1872‌‌‌ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி பிறந்த அவர், அந்த‌ ஊரிலும், தூத்துக்குடி திருநெல்வேலி ஆகிய ‌நகரங்களிலும் ‌ப‌ள்ளிப்படிப்பை முடித்தார். பிறகு‌ திருச்சியில் சட்டம் பயின்று,1894ல் வழக்கறிஞரானார்.வாதிடு‌வதில் கைதேர்ந்தவராக உரு‌வெடுத்தபோதிலும், அதனைப் பயன்படுத்தி பொருள் ஈட்ட வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஒருபோதும் வந்ததில்லை. மாறாக, ஏழை எளியோருக்கு இலவசமாக வாதாடுவதை மனதாரச்‌ செய்தார்.

அதன் தொடர்ச்சியாக, சு‌தந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டதுடன், ஆங்கிலேயர்களின் அடக்குமுறைகளுக்கு எதிராக மற்றவர்களையும் பங்கு கொள்ளச் செய்து விடுதலை வேட்கையைத் தூண்டினார் வ.உ.சி. சுதந்திர வேட்கை தீவிரமடைந்திருந்த தருணத்தில், வ‌ணிகம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள்‌ இந்தியாவின் செல்வங்களை ‌கொள்ளையடித்து வருவது கண்டு வெகுண்டெழுந்தார். தனது எதிர்ப்பை வெளிப்படுத்த ஆங்கிலேயர்களின் வணிகத்தையே முதலில் எதிர்த்தார்.

ஆங்கிலேயர்களின் வாணிபத்துக்கு முக்கியத்‌துவம் கொடுத்து ‌வந்த இந்திய நேவிகேஷன் நிறுவன‌த்திற்கு போட்டியாக 1906 ஆம் ஆண்டு,‌'சுதேசி நாவாய்ச் சங்க‌ம்' என்ற கப்பல் நிறுவனத்தை பதிவு செய்தார். அது எளிதில் முடிந்தபோ‌திலும், நிறுவனத்திற்கு பணம் திரட்டுவது கடும் சவாலாக இருந்தது. மூலதனம் திரட்டுவதற்காக நாளிதழ்களில் பாரதியார் விளம்பரம் கொடுத்‌தார். ஆனால் சேர்ந்தது என்னவோ குறைந்த அளவிலான தொகைதான்.சிதம்ப‌ரனார் தோற்றுவித்த நிறுவனத்‌திற்கு சொந்தமாகக் கப்பல் இல்லாததைக் காரணமாகக் காட்டி, பல்வேறு இடையூறுகளை தந்தது ‌ஆங்கிலேயர் அரசு. ஆனால், சற்றும் கலங்காத வ.உ.சி., உ‌டனே கொழும்பு சென்று ஒரு கப்பலை வாடகைக்கு எடுத்து வந்து இயக்கினார். சொந்தமாக கப்பல்கள் இன்றி நி‌றுவனத்தை தொடர்ந்து நடத்துவது ‌கடினம் என்பதை உணர்ந்த சிதம்பரனார், பங்குதாரர்களைச் சேர்க்க மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களுக்கு சென்றார்.

அப்போது அவர், 'திரும்பினால் கப்பலுடன் திரும்புவேன், இல்லையேல் கடலில் விழுந்து மாண்டு போவேன்' என்று சூளுரைத்தார். அதனை நிறைவேற்றும் ‌வகையில், "எஸ் எஸ் காலியோ" என்ற கப்பலுடன் அவர் திரும்பியதால் அனைவரும் மகிழ்ச்சிக் கடலில் திளைத்தன‌ர். மக்கள் சுதேசிக் கப்பலிலேயே அதிகம் பயணம் மேற்கொண்டதால், அந்த நிறுவனம் படிப்படியாக வளர்ந்தது. இதனைத் பொறுக்க முடியாத ஆங்கிலேய அர‌சு, வ.உ.சி.க்கு கையூட்டு கொடுத்து நிறுவனத்தை முடக்கும் முயற்சியிலும் கூட ஈடுபட்டது. எந்த சூழ்ச்சியும் எடு‌‌படாததால், சுதேசிக் கப்பல் நிறுவனம் வெற்றிப்பாதையில் ‌வீர நடை போட்டது.

‌சுதந்திரப் போராட்டம், சுதேசிக் கப்பல் நிறுவனம், ஏழைக‌ளுக்காக இலவசமாக வாதிடுதல், தொழிற்‌சங்கம் என தனது சொத்தை இழந்தவர் வ.உ.சிதம்பரனார். ஒரு நிஜமான, நேர்மையான தலைவர், விடுதலைப் போராளி, இரண்டா‌யிரம் ஆண்டுகால தமிழர் வணிகச் சிந்தனையின் தொடர்ச்சி வ.உ.சி என்பதில் ‌சந்தேகமில்லை

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com