“பாத்திரம், மூங்கில் குச்சி, ஹெட்ஃபோன், இரும்பு ஸ்க்ரூ”: பள்ளிக்கு அலாரம் தயாரித்து அசத்திய மாணவர்

 “பாத்திரம், மூங்கில் குச்சி, ஹெட்ஃபோன், இரும்பு ஸ்க்ரூ”: பள்ளிக்கு அலாரம் தயாரித்து அசத்திய மாணவர்
 “பாத்திரம், மூங்கில் குச்சி, ஹெட்ஃபோன், இரும்பு ஸ்க்ரூ”: பள்ளிக்கு அலாரம் தயாரித்து அசத்திய மாணவர்

திருப்பூரில் அன்றாட வீட்டு உபயோக பொருட்களை வைத்து 6 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர், தனது பள்ளிக்கு அலாரம் ஒன்றை வடிவமைத்துள்ளார். 

திருப்பூர், தோட்டத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கிள்ளிவளவன். இவர் கட்டுமான ஆலோசகராக உள்ளார். இவரது மனைவி கனிமொழி. இவர்களின் மகன் இனியன். பெருமநல்லூரில் உள்ள அரசுப்பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வருகிறார். 

இந்நிலையில், அப்பள்ளியில் உள்ள அலாரம் இயங்காததை கண்ட இனியன், அன்றாட வீட்டு உபயோக பொருட்களான பாத்திரம், மூங்கில் குச்சி, ஹெட்ஃபோன், இரும்பு ஸ்க்ரூ ஆகியவற்றை வைத்து  புதிதாக அலாரம் ஒன்றை தயார் செய்துள்ளார். இது அனைவர் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

இதுகுறித்து ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழக்கு பேட்டியளித்த இனியன், “நான் எப்போதும் புதிய விஷயங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்துவேன். எனக்கு மிகவும் பிடித்த பாடம் அறிவியல். விஞ்ஞான கண்டுபிடிப்புகள் மற்றும் சோதனைகள் குறித்த நிகழ்ச்சிகளைத்தான் நான் விரும்பி பார்ப்பேன். எதிர்காலத்தில் ஏதேனும் ஒன்றை மீண்டும் புதிதாக உருவாக்குவேன் என நம்பிக்கை உள்ளது. 

கடந்த வாரம் பள்ளியின் தாழ்வாரத்தில் இருந்த அலாரத்தை காணவில்லை. அதுகுறித்து ஆசிரியர்களிடம் கேட்டேன். அது பழுதாகிவிட்டதாக தெரிவித்தார்கள். அதன் வடிவமைப்பை பார்த்து புதிதாக அலாரத்தை வடிவமைக்க வேண்டும் என முடிவெடுத்தேன். அதன்படி, மொபைல் ஃபோன் சார்ஜர், டிசி 15 வி மோட்டார், மூங்கில் குச்சி, ஹெட்போன், இரும்பு ஸ்க்ரூ, பாத்திரம் ஆகியவற்றை கொண்டு அலாரம் தயாரித்தேன். இதனுடன் டைமரை இணைத்தால் பள்ளி நேரப்படி பெல் அடிக்கும்” எனத் தெரிவித்தார். 

இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் மகேந்திரன் கூறுகையில், “முதலில் நாங்கள் இதை பார்க்கும்போது இயங்காது என நினைத்தோம். பின்னர், இனியன் சுவிட்ச் ஆன் செய்ததும் பெல் அடித்தது. இது மிகவும் சாதாரண மாடல். இதனுடன் பெரிய ஸ்க்ரூவை இணைத்தால் ஒலியை சத்தமாக கேட்க முடியும். இதை எங்கள் பள்ளியில் பயன்படுத்த முடிவெடுத்துள்ளோம். இது இனியனை ஊக்குவிக்க மட்டுமல்ல. மற்ற மாணவர்களையும் சேர்த்து ஊக்கப்படுத்துவதற்காகவே” எனத் தெரிவித்தார். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com