கந்துவட்டி போத்ரா மீது பாரிவேந்தர் சார்பில் புகார்
குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பைனான்சியர் போத்ரா மீது, இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் புகார் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.
அதில், போத்ராவும், அவரது 2 மகன்களும் பணம் பறிக்கும் நோக்கோடு, பாரிவேந்தருக்கு கடன் கொடுத்ததாக ஊடகங்கள் மூலம் மிரட்டியதாக குறிப்பிட்டுள்ளது. மோசடியில் ஈடுபட்ட மதனிடம் 7 கோடியே 50 லட்சம் ரூபாயை கொடுத்துவிட்டு, பாரிவேந்தரிடம் கொடுத்ததாக போத்ரா கொடுத்த பொய்யான புகாரில், வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும் அந்தப் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மோசடி, மிரட்டல் செயல்களில் ஈடுபட்டு வரும் போத்ரா மீதும், அவரது மகன்களான ககன், சந்தீப் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சென்னை மாநகர காவல் ஆணையரிடம் பாரிவேந்தர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.