முதலாளியை காப்பாற்ற வேண்டி தன் உயிரை அர்ப்பணித்த நாய்
உசிலம்பட்டி அருகே மின்கம்பி தாக்கிய எஜமானின் உயிரைக் காப்பாற்ற முயன்ற நாய், எஜமானுடன் சேர்ந்து உயிரிழந்தது.
தமிழகம் முழுவதும் பல இடங்களில் நேற்று இரவு பரவலான மழை பெய்தது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கல்கொண்டான்பட்டியில் நேற்று மாலை பெய்த கனமழை காரணமாக, மின்கம்பிகள் அறுந்தன. காலை வரை மின்கம்பிகள் அகற்றப்படாமல் இருந்தன. மின்கம்பிகள் அறுந்து கிடந்த வழியாக, மாடு ஒன்று சென்று மின்சாரத்தில் சிக்கியது. மாடு உயிருக்கு போராடுவதைக் கண்ட முதியவர் முக்ஹூசு மாட்டை காப்பாற்று முயன்றார். அப்போது அவர்மீதும் மின்சாரம் பாய்ந்து.
மின்சாரம் தாக்கிய நிலையில் மாடுடன் சேர்ந்து முக்ஹூசு துடிக்க, அவரது வளர்ப்பு நாய் கடித்து இழுத்து மீட்க முயன்றது. ஆனால் நாய் மீதும் மின்சாரம் பாய்ந்ததால் மாடு, முக்ஹூசு மற்றும் நாய் மூன்று பேரும் உயிரிழந்தனர். ஆதரவு இல்லாத நிலையில் நாய்க்கு அடைக்களம் கொடுத்து வளர்த்து வந்தவர் முக்ஹூசு, அவர் மீது இருந்த விசுவாசத்தால் தனது உயிரையே நாய் கொடுத்துள்ளது. இந்த நிகழ்வு அப்பகுதி மக்களிடையே நெகிழ்வை ஏற்படுத்தியது.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த முக்ஹூசுவின் உறவினர்கள், காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். காவல்துறையினர் மூன்று உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். முக்ஹூசுவின் உயிரிழப்பிற்காக அவரது குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என கோட்டாட்சியர் முருகேசன் தெரிவித்தார். இருப்பினும் மின்கம்பியை அகற்றமால் இருந்த அரசு ஊழியர்களின் அலட்சியத்தால், பரிதாபமாக இறந்த மூன்று உயிர்கள் திரும்ப வருமா? என அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.