பழைய இரும்புக்கடையில் கிடக்கும் தமிழக அரசின் இலவசங்கள்
தமிழக அரசால் இலவசமாக வழங்கப்பட்ட மிக்சி, கிரைண்டர் , மின்விசிறி உள்ளிட்ட பொருட்கள் பழுதாகியதால் கோவையில் பல்வேறு இரும்புக் கடைகளில் போடப்பட்டு அதில் உள்ள பொருட்கள் அனைத்தும் உடைக்கப்பட்டு தனித்தனியே விற்கப்படுகிறது.
தமிழகத்தில் அதிமுக அரசு பதவியேற்றதும் தேர்தலில் அறிவித்த இலவசத் திட்டங்களை அமல்படுத்தத் தொடங்கியது. அதன்படி தமிழக அரசால் அனைத்து பகுதிகளிலும் இலவசமாக மிக்சி, கிரைண்டர், மின் விசிறி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன. இந்நிலையில் அந்தப் பொருட்களில் போதிய அளவிலான தரம் இல்லாத காரணத்தால் பெரும்பாலான சாதனங்கள் விரைவில் பழுதாகியது.
இந்நிலையில் கோவையில் பல்வேறு பகுதிகளில் உள்ள பழைய இரும்புக்கடையில் குவியல் குவியலாக இலவச கிரைண்டர்கள் , மிக்சி, மற்றும் மின்விசிறிகள் பழுதாகிக் கிடக்கிறது. இந்தச் சாதனங்களை தனித்தனியே உடைத்து இரும்புக் கடைக்கு விற்பனை செய்து வருகின்றனர். நிதி ஒதுக்கி இலவசங்களை வழங்கினாலும் அதில் பயனில்லாமல் போதிய தரம் இல்லாதக் காரணத்தால் இந்தத் திட்டம் முற்றிலும் பயனற்று போகி உள்ளதாகப் பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்து உள்ளனர்.