அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவு: வெற்றியை நெருங்கிய ஜோ பைடன்
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றியை நெருங்கியுள்ளார்.
உலகமே எதிர்நோக்கிய அமெரிக்க அதிபருக்கான தேர்தல் கடந்த 3 ஆம் தேதி நடைபெற்றது. இதுவரை அறிவிக்கப்பட்ட முடிவுகளின்படி ஜனநாயக கட்சி வேட்பாளர் பைடன் 264 தேர்வாளர்களின் வாக்குகளையும், அதிபர் ட்ரம்ப் 214 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
பெரும்பான்மைக்கு மேலும் 6 தேர்வாளர்களின் வாக்குகளை மட்டுமே பைடன் பெற வேண்டியுள்ளது. இதனால் பைடனின் ஆதரவாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
அமெரிக்க அதிபருக்கான தேர்தல் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு வரும் நிலையில், வாக்கு எண்ணிக்கையை நிறுத்துங்கள் என ட்விட்டரில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதிவிட்டிருந்தார்.
சற்றுமுன் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாக்கு எண்ணிக்கை சட்டப்படி நடந்தால், தாம் எளிதாக வெல்வேன் என்று கூறினார். அமெரிக்க அதிபர் தேர்தலில் சதி நடப்பதாக மீண்டும் குற்றச்சாட்டினார்.