நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: வெற்றிக்காக அனைவரும் இப்போதே பணிகளை தொடங்க வேண்டும்: இபிஎஸ்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: வெற்றிக்காக அனைவரும் இப்போதே பணிகளை தொடங்க வேண்டும்: இபிஎஸ்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: வெற்றிக்காக அனைவரும் இப்போதே பணிகளை தொடங்க வேண்டும்: இபிஎஸ்

விளக்கை தூண்டிவிட்டால் பிரகாசமாய் எரிவதுபோல் உங்களை தூண்டியுள்ளேன்; நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வெற்றிக்காக அனைவரும் பணிகளை தொடங்க வேண்டும் என்று அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், சேலம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஓமலூரில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநில கூட்டுறவு சங்க தலைவர் இளங்கோவன், முன்னாள் அமைச்சர் செம்மலை, அதிமுக மாநகர், பேரூராட்சி, ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் முல்லை பெரியாறு விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தும்; முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை விட்டுக் கொடுக்கும் வகையில் திமுக அரசு தொடர்ந்து செயல்படுவதாக கண்டனம் தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், மேட்டூர் அணை 120 அடியை எட்டும் தருவாயில் உள்ள நிலையில், சரபங்கா வடிவத்தில் உள்ள 100 ஏரிகளுக்கு தண்ணீர் திறக்கப்படாததற்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதைத்தொடர்ந்து நிர்வாகிகளிடையே பேசிய எடப்பாடி பழனிசாமி,வரும் ஜனவரி மாதத்திற்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் பணிகளை நாம் இப்போதே தொடங்க வேண்டும். இந்த தேர்தலில் வென்றால்தான் நாம் மக்களுக்கான அடிப்படை தேவைகளை செய்துதர முடியும்.

அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தது. வியாபாரிகள் அச்சம் இல்லாமல் வியாபாரம் செய்தனர். திமுக ஆட்சியில் வியாபாரிகள் பயந்து பயந்து வியாபாரம் செய்கின்றனர். இந்த தேர்தலில் திமுகவினர் தில்லுமுல்லு செய்து வெற்றிபெற பார்ப்பார்கள். நாம் விழிப்போடு இருக்க வேண்டும். கள்ள ஓட்டு போட அனுமதிக்கக் கூடாது.

திமுக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த பயிர்கடன் தள்ளுபடி, கூட்டுறவு நகைகடன் தள்ளுபடி, கல்விக்கடன் தள்ளுபடி, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, குடும்ப பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும், முதியோர் உதவி தொகை 1000 ரூபாயிலிருந்து 1500 ஆக உயர்த்தப்படும் போன்ற வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை.

பொய் வாக்குறுதியை கொடுத்து மக்களை ஏமாற்றி கொள்ளைபுறமாக ஆட்சிக்கு வந்துள்ளனர். விளக்கை தூண்டினால் பிரகாசமாக எரியும். நான் உங்களை தூண்டி உள்ளேன் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று பேசினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com