நகர்புற உள்ளாட்சித் தேர்தலை தள்ளிவைக்கும்படி உத்தரவிட முடியாது : சென்னை உயர்நீதிமன்றம்
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலை தள்ளிவைக்கும்படி உத்தரவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நகர்புற உள்ளாட்சித் தேர்தலை தள்ளிவைக்க கோரிய வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது. அப்போது பேசிய நீதிபதிகள், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன. தேர்தலை நடத்தும்படி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு முரணாக தேர்தலை தள்ளிவைக்கும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட முடியாது. மாநில தேர்தல் ஆணைய கொரோனா தடுப்பு விதிகளை அனைத்து கட்சிகளும் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.
விதிமீறல் இருந்தால் நீதிமன்ற கவனத்துக்கு கொண்டு வர வேண்டும். பொதுமக்கள் பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.தேர்தல் 5 ஆண்டுகளுக்கு மேல் நடத்தப்படவில்லை. அதை தொடரக் கூடாது. தேர்தல் நடத்துவது தொடர்பான அரசியல் சாசன விதிகளை தேர்தல் ஆணையம் போன்ற அரசியல் சாசன அமைப்புகள் புறக்கணிக்க கூடாது'' என தெரிவித்துள்ள நீதிமன்றம்,தேர்தல் அறிவித்தால் அது கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி நடத்தப்பட வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.