திடீரென உடைந்த ஊராட்சிகோட்டை மின் கதவணையின் ஷட்டர் - மின்சார உற்பத்தி நிறுத்தம்
ஈரோடு மாவட்டம் ஊராட்சிகோட்டை மின் கதவணையின் ஷட்டர் உடைந்ததால், மின்சார உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த ஊராட்சிகோட்டை மின் கதவணையில், 3வது ஷட்டரில் நேற்று திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால், அங்கு தேக்கி வைக்கப்பட்டிருந்த நீர் வெளியேறியது. ஷட்டர் உடைந்தது குறித்து, தகவலறிந்த வெண்டிபாளையம் மின் உற்பத்தி அலுவலர்கள் உடனடியாக நீர் வரத்தை கண்காணித்தனர்.
இதையடுத்து கதவணையில் இருந்த மேலும் சில ஷட்டர்களை திறந்து நீரை காவிரியாற்றில் வெளியேற்றினர். வழக்கமாக, வெண்டிபாளையம் காவிரியாற்றின் ஓரம், பரிசல்கள் மூலம் மீன் பிடித்தல் நடக்கும். ஆனால், நீர்வரத்து அளவு அதிகரித்ததால் பரிசல்கள் அனுமதிக்கப்படவில்லை. பொதுமக்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டது.
மேலும் மின்சார உற்பத்தியும் நிறுத்தப்பட்டது. சேதமடைந்த பகுதியில் இருந்து 30 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.
பொதுப்பணித்துறை அதிகாரிகள் சேதமடைந்த பகுதியில் புதிய ஷட்டரை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் தற்போது தற்காலிக ஷட்டர் பொருத்தப்பட்டுள்ளது. ஷட்டர் பொறுத்தும் பணிகள் நிறைவடைந்தவுடன் மின்சார உற்பத்தி தொடங்கப்படும் என மின் உற்பத்தி அலுவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.