“8 மாசம் வேலை.. 4 மாசம் முழுசா படிப்பு” - யுபிஎஸ்சியில் தமிழ் வழியில் தேர்ச்சிபெற்ற மாணவர் பேட்டி!
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் ஐஆா்எஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கு மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வானது, முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று படிநிலைகள் கொண்டது. 2024 ஆம் ஆண்டுக்கான இறுதித் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. அதன்படி இன்று வெளியான இறுதி தரவரிசைப் பட்டியலில் மொத்தமாக 1,009 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், தமிழகத்தில் சிவச்சந்திரன் என்ற மாணவர் முதலிடமும், அகில இந்திய அளவில் 23-ம் இடமும் பெற்றுள்ளார். மேலும், தமிழ் வழியில் எழுதி யுபிஎஸ்சி தேர்வில் சங்கர் பாண்டிராஜ் என்ற மாணவரும் சாதனை படைத்துள்ளார். இதுதொடர்பாக அவரிடம், புதிய தலைமுறை தொலைக்காட்சி பிரத்யேகமாகப் பேட்டி எடுத்தது.
அதில் அவர், ”2016 பிப்ரவரியில் சென்னைக்கு வந்தேன். 9 வருட போராட்டத்திற்கு பின் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றேன். தொடக்கத்தில் படிப்பதற்கு சரியான வாய்ப்புகள் படிப்புக்கு கிடைக்கவில்லை. பொருளாதார பலமும் இல்லை. வேலை பார்த்துக் கொண்டே தான் படிச்சேன். அதனால் தான் இத்தனை வருடங்கள் ஆகிவிட்டது.
ஆரம்பத்தில் வீட்டில் இருந்து ரூ.1500 தான் கொடுத்தாங்க.. அது போதுமானதாக இல்லை. அதனால் கிடைத்த வேலைகளையெல்லாம் செய்தேன். 8 மாதம் வேலை செய்வேன், அதில் கிடைக்கும் பணத்தை வைத்து 4 மாதங்கள் முழுசா படிப்பேன். பள்ளிகளில் முழுக்க முழுக்க தமிழ் வழியில்தான் படிச்சேன். கல்லூரியும் நேரடியாக செல்லாமல் தொலைதொடர்பில் தான் படிச்சேன். தமிழ் வழியில் தேர்வு எழுதுவது கடினம். இருந்தாலும் இளம்பகவத் ஐஏஎஸ், ஜெயசீலன் ஐஏஎஸ் ஆகியோர் தமிழ் வழியில் படித்தவர்கள் என்பதுதான் எங்களுக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தது.
தமிழில் உள்ள பாடப்புத்தகங்களை படித்தோம். நாளிதழ்களை தொடர்ந்து படிச்சோம். தற்போது ஐ.ஆர்.எஸ் கிடைக்கும் என நினைக்கிறேன். மீண்டும் தேர்வு எழுதி ஐஏஎஸ் ஆவேன். தமிழ் வழியில் தேர்வெழுதி ஐஏஎஸ் ஆகி தமிழுக்கு பெருமை சேர்க்க வேண்டும். இடையில் ஒரு என்.ஜி.ஓவில் ஏழைகளுக்காக பணியாற்றினேன். அவர்கள் பொருளாதார ரீதியாக எனக்கு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.
இதுவரை மூன்று மெயின்ஸ், 8வது பிரிலிம்ஸ், முதல் நேர்காணல். ஏற்கனவே குரூப் 2 தேர்வில் வெற்றிபெற்று சர்வீஸ்ல தான் இருக்கேன். தமிழ்வழி என்பதால் தமிழ்நாட்டில் மட்டும்தான் படிக்க முடியும். தமிழ் வழியில் தேர்வு எழுதுபவர்களுக்கு பெரிய மார்க்கெட் இல்லை. குறைவான பேர்தான் தேர்வு எழுதுகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.