“தொடரும் தீண்டாமை கொடுமை”- குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர்கள்..!

“தொடரும் தீண்டாமை கொடுமை”- குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர்கள்..!
“தொடரும் தீண்டாமை கொடுமை”- குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர்கள்..!

மதுரை எஸ்.வலையப்பட்டியில் பட்டியலின சத்துணவு ஊழியர்களுக்கு மற்றொரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவையடுத்து, பணிநியமனம் பெற்ற கிராமத்திலேயே இருவரும் பணிகளை தொடர்கின்றனர். ஆயினும் பள்ளிக்கு குழந்தைகள் யாரும் வரவில்லை.

எஸ்.வலையப்பட்டியில் பட்டியலினத்தைச் சேர்ந்த இரு பெண்கள் அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் பணியாற்ற நியமனம் செய்யப்பட்டனர். இதற்கு அந்த கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து மதிப்பனூர், கிழவனூர் கிராமங்களுக்கு, இரு பணியாளர்களும் கூடுதல் பொறுப்பாக அனுப்பப்பட்டனர்.

இந்த தீண்டாமை கொடுமை குறித்து புதிய தலைமுறையில் தொடர்ந்து செய்தி ஒளிபரப்பான நிலையில், மாநில மனித உரிமை ஆணையம் மதுரை மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்பியது. ஜூலை 17 ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளிக்கவும் அதில் தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து விசாரணை நடத்திய பொறுப்பு மாவட்ட ஆட்சியர் சாந்தகுமார் உடனடியாக இரு ஊழியர்களையும் பொறுப்பு பணியிலிருந்து விடுவித்து பணி நியமனம் செய்யப்பட்ட எஸ்.வலையப்பட்டி கிராம அங்கன்வாடி மையத்திலேயே பணி செய்ய நேற்று உத்தரவிட்டார்.

இதையடுத்து இருவரும் எஸ்.வலையப்பட்டி அங்கன்வாடி மையத்தில் பணியை தொடர்ந்து வருகின்றனர். ஆயினும் கடந்த 2 ஆண்டுகளாகவே இருபிரிவினர் இடையே சாதி மோதல்கள் நீண்டுகொண்டிருக்கும் நிலையில், ஊழியர்கள் பணிக்குத் திரும்பினாலும், அங்கன்வாடி பள்ளிக்கு யாரும் தங்கள் பிள்ளைகளை இன்றும் அனுப்பவில்லை. எஸ்.வலையப்பட்டி கிராமத்து அங்கன்வாடியில் 20 குழந்தைகள் படித்துவரும் நிலையில், இன்றும் யாரும் பள்ளிக்கு வரவில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com