‘திருமணமாகாத பெண்கள் தந்தையிடம் ஜீவனாம்சம் பெறலாம்’ - உயர்நீதிமன்றம்
திருமணம் ஆகாத 18 வயது பெண்கள் தந்தையிடம் ஜீவனாம்சம் பெற உரிமை உள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தந்தையை பிரிந்து வாழும் 18 வயது பெண் ஒருவர், திருமணம் ஆகாத தனக்கு ஜீவனாம்சம் வழங்கும்படி தந்தைக்கு உத்தரவிடக் கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் 18 வயது பூர்த்தி அடைந்து விட்டதால், ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்து அந்தப் பெண், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், உச்ச நீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள்காட்டினார். அத்துடன் 18 வயது கடந்து திருமணம் ஆகாத பெண்கள், தந்தையிடம் ஜீவனாம்சம் பெற உரிமை உள்ளது எனக் கூறினார்.
மேலும், குடும்ப நல நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். பின்னர் அப்பெண்ணை ஜீவனாம்சம் கோரி மீண்டும் குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யவும் நீதிபதி அறிவுறுத்தினார்.