வெங்கைய்யா நாயுடு இல்ல விழா | சென்னை வரும் அமித்ஷாவுக்கு பிரமாண்ட வரவேற்பளிக்க பாஜக ஏற்பாடு
செய்தியாளர்: விக்னேஷ்முத்து
முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு இல்ல திருமண விழாவில் பங்கேற்பதற்காக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று சென்னை வருகிறார். அவருக்கு தமிழக பா.ஜ.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடுவின் பேரன் திருமண விழா மாமல்லபுரத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மாலை 7 மணிக்கு டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வருகிறார். இதையொட்டி, பா.ஜ.க. சென்னை பெருங்கோட்டம் சார்பில் விமான நிலையத்தில் அமித்ஷாவுக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சிக்கு பொறுப்பாளர்களாக மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம், மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத், மாநில விளையாட்டுப் பிரிவு தலைவர் அமர் பிரசாத் ரெட்டி ஆகியோரை மாநில தலைவர் அண்ணாமலை நியமித்துள்ளார். பரதநாட்டியம், பறை இசை, செண்டை மேளம், சிவ வாத்தியம், கரகாட்டம், ஒயிலாட்டம், சென்னை கானா, திருநங்கைகள் நடனம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பாஜகவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
இது தொடர்பாக, பொறுப்பாளர்களுடன் அண்ணாமலை நேற்று ஆலோசனை நடத்தினார். வெங்கய்ய நாயுடு இல்ல திருமண விழாவில் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களும் கலந்து கொள்கின்றனர். அமித்ஷா வருகையை முன்னிட்டு சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட, சென்னை விமான நிலையம், ராஜ் பவன், விவிஐபி பயணிக்கும் வழித்தடங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அப்பகுதிகளில் ட்ரோன்கள், ரிமோட் மூலம் இயக்கப்படும் மைக்ரோலைட் ஏர் கிராப்ட், பாரா கிளைடர்ஸ், பாரா மோட்டார்ஸ், ஹேன்ட் கிளைடர்ஸ், ஹாட் ஏர் பலூன்கள் போன்றவை பறக்க விட தடை விதிக்கப்பட்டுள்ளது. குடியரசு துணைத் தலைவர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் வருகையையொட்டி இன்று மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை கிழக்கு கடற்கரை சாலையை (ஈசிஆர்) பொதுமக்கள் பயன்படுத்த போலீஸார் தடை விதித்துள்ளனர். இன்று மாலை சென்னை வரும் அமித்ஷா இரவே மீண்டும் டெல்லி திரும்புகிறார்.