அமித் ஷா
அமித் ஷாபுதிய தலைமுறை

”வரும் காலத்தில் ஒரு தமிழரையாவது பிரதமராக்க உறுதி எடுப்போம்” - சென்னையில் அமித் ஷா பரபரப்பு பேச்சு!

”வரும் காலத்தில் ஒரு தமிழரையாவது பிரதமராக்க உறுதி எடுப்போம்” என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நேற்று இரவு தனி விமானம் மூலம் சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷாவுக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றுக்குப் புறப்பட்டுச் சென்ற அமித் ஷாவை, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் வரவேற்றனர். அந்த நட்சத்திர விடுதியில் திரைப்பட தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன், தொழிலதிபர் நல்லி குப்புசாமி, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் உள்ளிட்ட 24 பிரபலங்கள் அமித் ஷாவுடன் கலந்துரையாடினர்.

இந்த நிலையில், இன்று சென்னை கோவிலம்பாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தென்சென்னை தொகுதி நாடாளுமன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதில் அமித் ஷா தமிழக பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழர்களின் பிரதமர் வாய்ப்பு குறித்து அமித் ஷா பேசியிருப்பது வைரலாகி வருகிறது.

அவர் பேசிய 10 முக்கியமான பாயிண்ட்கள்!

1. தமிழர்கள் பிரதமராகும் வாய்ப்பை இரண்டு முறை தவறவிட்டுள்ளது தமிழகம்; அதற்குக் காரணம் திமுகதான்.

2. வரும் காலத்தில் ஒரு தமிழரையாவது பிரதமராக்க உறுதி எடுப்போம்.

3. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 25 தொகுதிகளில் வெற்றி பெற இலக்கு நிர்ணயித்துள்ளோம்.

4. மத்திய அரசின் 9 ஆண்டுக்கால சாதனைகளை மக்களிடம் பாஜக நிர்வாகிகள் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும்.

5. தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்க உழைக்கவேண்டும். பாஜக நிர்வாகிகள், பூத் கமிட்டிகளை வலுப்படுத்த வேண்டும்.

6. முதல்வராக வேண்டும் என்பதை கடந்து பிரதமரை உருவாக்க வேண்டும் என உங்கள் இலக்கை பெரிதாக நிர்ணயம் செய்யுங்கள்.

7. 300 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெற்று, பிரதமர் மோடி ஆட்சியை பிடிக்கப்போவது உறுதியாகியுள்ளது.

8. நான் வந்தபோது மின்சாரம் தடைப்பட்டது எனக்கு ஒன்று பாதிப்பு கிடையாது. தமிழகம் இருளில்தான் இருக்கிறது என்பதைத்தான் அது காட்டுகிறது. அதுதான் இங்கு நிலை. நாம் அதை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவோம்.

9. செப்டம்பர் மாதம் இறுதிக்குள் தென் சென்னை நாடாளுமன்ற பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை முடிக்க வேண்டும்.

10.தென் சென்னையில் வெற்றி பெற பாடுபடுங்கள்.

அமித்ஷாவின் சென்னை வருகை பாஜகவிற்கு நாடாளுமன்ற தேர்தலில் பலனை தருமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதுதொடர்பாக புதிய தலைமுறையில் நடத்தப்பட்ட சிறப்பு விவாதத்தை கீழ் காணும் காணொலியில் காணலாம்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கோவிலம்பாக்கம் மண்டபத்தில் இருந்து விமான நிலையம் புறப்பட்டார். முன்னதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட மூத்த தலைவர்களுடன் கலந்துரையாடினார் அமித்ஷா. சென்னையில் இருந்து வேலூருக்கு செல்ல உள்ளார். அமித்ஷாவோடு ஹெலிகாப்டரில் அண்ணாமலை, கேசவன் விநாயகம், சுதாகர் ரெட்டி உள்ளிட்டோரும் பயணிக்க உள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com