தமிழகத்தில் எய்ம்ஸ் அமைக்க 6 மாதங்களில் நடவடிக்கை: மத்திய அமைச்சர்
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டுவர 6 மாதங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அஷ்வினி குமார் தவுபே தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் டெங்கு பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ள சென்னை வந்த அஷ்வினி குமார், முன்னதாக பாரதிய ஜனதா மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதன்பின் சுகாதாரத்துறை அமைச்சர், அதிகாரிகளுடன் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்குச் சென்ற மத்திய அமைச்சர், டெங்கு பாதித்த நோயாளிகளைச் சந்தித்து நலம் விசாரித்தார்.
இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டுவர 6 மாதங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். அதன்பின், கிரீன் வேய்ஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்திற்குச் சென்ற மத்திய அமைச்சர், டெங்கு கட்டுப்பாட்டு பணிகள் குறித்து அவருடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது டெங்கு பாதிப்பு குறித்த அறிக்கையை மத்திய அமைச்சரிடம், முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்.