சிறுமியை கொன்றுவிட்டு ஊடகத்திற்கு பேட்டி அளித்த மாமா - போலீஸ் கிடுக்குப்பிடி

சிறுமியை கொன்றுவிட்டு ஊடகத்திற்கு பேட்டி அளித்த மாமா - போலீஸ் கிடுக்குப்பிடி

சிறுமியை கொன்றுவிட்டு ஊடகத்திற்கு பேட்டி அளித்த மாமா - போலீஸ் கிடுக்குப்பிடி
Published on

கோவை விளாங்குறிச்சியில் இரண்டரை வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் சிறுமியின் உறவினரே கைது செய்யப்பட்டுள்ளார். பாலியல் நோக்கில் குழந்தையை கடத்திச்சென்று கிணற்றில் வீசி கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஈரோடு மாவட்டம் செங்கப்பள்ளியைச் சேர்ந்தவர் கனகராஜ். இவர் கோவை தனலட்சுமி நகரில், மனைவி காஞ்சனா மற்றும் இரண்டரை வயது பெண் குழந்தை அரும்பதாவுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். கனகராஜ் ஜே.சி.பி. இயந்திரங்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார்.  காஞ்சனாவின் அம்மா பேச்சியம்மாள் வீடும் இவர்கள் வசிக்கும் பகுதியில்தான் உள்ளது. தனியாக வசிக்கும் பேச்சியம்மாள் பசுமாடுகளை வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறார்.

நேற்று முன்தினம் சொந்த ஊருக்குச் சென்ற கனகராஜ், மனைவி காஞ்சனா மற்றும் குழந்தையை பாட்டி பேச்சியம்மாள் வீட்டில் விட்டு சென்றிருக்கிறார். நேற்று காலை பேச்சியம்மாள் தூங்கி எழுந்து பார்த்தபோது பக்கத்தில் படுத்திருந்த குழந்தை அரும்பதாவை காணவில்லை. உடனே கனகராஜிற்கு தகவல் கொடுத்துள்ளார். உடனே அக்கம்பக்கத்தில் இருப்பவர்களும் குழந்தையை பல இடங்களில் தேடியுள்ளனர். ஆனால் குழந்தை கிடைக்கவில்லை.

இதனிடையே பேச்சியம்மாளின் வீட்டிற்கு எதிரே கருவேலங்காடு உள்ளது. அங்கு சென்று பார்த்தபோது அங்குள்ள கிணற்றில் அரும்பதா பிணமாக மிதந்து கிடந்துள்ளார். இருப்பினும் குழந்தை உயிரோடு இருக்குமோ என்ற சந்தேகத்தில் கே.எம்.சி.எச். மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் நீரில் மூழ்கி ஏற்கெனவே குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதனையடுத்து பீளமேடு போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் சிறுமி கொலை சம்பவம் தொடர்பாக சிறுமியின் உறவினரே கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் ரகுநாதன். இவர் சிறுமியின் தாயான காஞ்சானவிற்கு தூரத்து சகோதரன் உறவு முறையாகும். அப்படியானால் சிறுமிக்கு, ரகுநாதன் மாமா முறை வரும். அப்பகுதியில் விவசாய வேலை செய்து வரும் ரகுநாதன், சிறுமி தாயுடன் இரவில் தூங்கிக் கொண்டிருப்பதை கண்டதாகவும், காஞ்சனா வீட்டை பூட்டாமல் படுத்திருந்த நிலையில் அது ரகுநாதனுக்கு சாதகமாகிவிட்டதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த குழந்தையை தவறான நோக்கத்தோடு தூக்கிச் சென்றபோது அழுததால், அதன் வாயைப் பொத்தியதில் குழந்தை மயங்கியதாக கூறப்படுகிறது. இதனால் செய்வதறியாது குழந்தையை, ரகுநாதன் கிணற்றில் வீசிச் சென்றது விசாரணை மூலம் தெரியவந்தாக போலீஸார் கூறுகின்றனர். 

தன் மீது சந்தேகம் வராமல் இருக்க குழந்தையை தேடுவது போல் நாடகமாடியும் ஊடகங்களுக்கும் பேட்டியளித்துள்ளார் ரகுநாதன். இருப்பினும் காவல்துறையின் சந்தேகம் ரகுநாதன் பக்கம் திரும்ப, அவரிடம் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில்  அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் ரகுநாதனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com