இனப்படுகொலை குற்றத்திலிருந்து இலங்கையை காப்பாற்றும் வகையில் தீர்மானம்: சீமான் கண்டனம்

இனப்படுகொலை குற்றத்திலிருந்து இலங்கையை காப்பாற்றும் வகையில் தீர்மானம்: சீமான் கண்டனம்

இனப்படுகொலை குற்றத்திலிருந்து இலங்கையை காப்பாற்றும் வகையில் தீர்மானம்: சீமான் கண்டனம்
Published on

இனப்படுகொலை குற்றத்திலிருந்து இலங்கையைக் காப்பாற்றும் வகையில், ஐ.நா.மன்றத்தில் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தீர்மானம் கொண்டுவருவதைக் கைவிட வலியுறுத்தி தனியொருவராக அம்பிகை அம்மையார் முன்னெடுக்கும் அறப்போராட்டம் வெல்ல உலகத் தமிழர்கள் துணைநிற்போம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக சீமான் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் “இனப்படுகொலை குற்றத்திலிருந்து இலங்கையைக் காப்பாற்றும் வகையில், ஐ. நா. மனித உரிமைப் பேரவையில் ஆதரவான தீர்மானம் கொண்டுவருவதைப் பிரித்தானிய உள்ளிட்ட நாடுகள் கைவிடவேண்டுமென வலியுறுத்தி பிரித்தானியாவில் வசிக்கும் புலம் பெயர் ஈழத் தமிழரான அம்மையார் அம்பிகை அவர்கள் தொடர் உண்ணாநிலைப் போராட்டத்தைத் தனியொருவராகத் தொடங்கியுள்ளது உலகத்தார் கண் முன்னே பாரிய இழப்பைச் சந்தித்த பிறகும் தமிழினம் ஆதரவற்று தனித்து விடப்பட்டுள்ளதையே பெருவலியோடு உணர்த்துகிறது.

பத்தாண்டுகளுக்கும் மேலாக இனப்படுகொலைக்கு நீதிகேட்டுப் போராடும் தமிழினத்திற்கு மாபெரும் துரோகத்தைப் புரியும் வகையில் ஐநா மனித உரிமைப் பேரவையில் இனப்படுகொலை செய்த இலங்கையைக் காப்பாற்ற மீண்டும் உள்நாட்டிலேயே நீதி விசாரணையைச் செய்து கொள்ளலாம் என்று பிரிட்டன் தலைமையிலான உலக நாடுகள் தீர்மானம் கொண்டுவரவுள்ள செய்தி உலகத் தமிழர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அறத்தின் பக்கம் நின்று நீதியைப் பெற்றுத்தரவேண்டிய நாடுகள், இனப்படுகொலை குற்றவாளிகளையே விசாரிக்கக் கோருவது எவ்வகையில் நியாயமாகும்?

ஏற்கனவே கடந்த பத்தாண்டுகளில் இலங்கை பேரினவாத அரசிடம் உள்நாட்டு விசாரணை ஒப்படைக்கப்பட்டு அதில் அணுவளவு முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதோடு, தமிழர்கள் மீதான ஒடுக்குமுறைகளும், இனவெறி தாக்குதல்களும் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. மீண்டும் இனப்படுகொலையாளன் ராஜபக்சே தலைமையிலான அரசாங்கம் அமைந்தவுடன் சிங்கள பேரினவாத செயல்முறைகள் உச்சத்தை அடைந்துள்ளன. இதை நன்கு உணர்ந்த பிறகே, இலங்கை அரசின் இனவெறிச் செயல்பாடுகளை மிக விரிவாகப் பட்டியலிட்டு இலங்கை மீது பன்னாட்டு நீதி விசாரணை நடத்த உலக நாடுகள் முன்வரவேண்டும் என்று ஐநா மனித உரிமை பேரவையே கோரியிருந்தது. ஐ. நா. மனித உரிமை பேரவை முன்னாள் ஆணையர் நவநீதம் பிள்ளை அவர்களும் இலங்கை மீதான உலக நாடுகள் பார்வை இனியாவது மாற வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். ஆனால் அவற்றைப் புறந்தள்ளி மீண்டும் இலங்கைக்கு ஆதரவாக விசாரணைக் காலத்தை நீட்டித்துக் கொடுத்து, உள்நாட்டிலேயே விசாரணை நடத்திக்கொள்ளவும் அனுமதி வழங்கும் வகையில் உலக நாடுகள் தீர்மானம் கொண்டுவருவது தமிழ் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய நீதியை முற்று முழுதாக நீர்த்துப் போகச்செய்யும் நடவடிக்கையே ஆகும். இதனால் ஐநா மனித உரிமை பேரவை அறிக்கைக்குப் பிறகு மிகுந்த நம்பிக்கையுடன் இனப்படுகொலைக்கு இனியாவது உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு நீதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் இருந்த தமிழர்கள் மிகப்பெரிய ஏமாற்றமும், வேதனையையும் அடைந்துள்ளனர்.

நம்பிக்கைத் துரோகத்தால் வீழ்ந்த தமிழினம் மீண்டும் மீண்டும் வஞ்சிக்கப்படும் வேதனையைத் தாளாது அம்மையார் அம்பிகை அவர்கள் தன்னுயிரைப் பொருட்படுத்தாது தனியொரு பெண்மணியாகத் தீரத்துடன் முன்னெடுத்துள்ள போராட்டத்தை எண்ணி உள்ளம் பெருமிதம் கொண்டாலும், கடந்தகாலக் கசப்பான அனுபவங்கள் கற்றுத்தந்த பாடங்கள் இப்படியொரு கடினமான முடிவை அம்மையார் எடுத்திருக்க வேண்டாம் என்று எண்ணத் தோன்றுகிறது. இதைப்போன்றதொரு அறப்போராட்டத்தில்தான் அண்ணன் திலீபனையும், அன்னை பூபதி அவர்களையும் நாம் இழந்தோம். ஆகவே அம்பிகை அம்மையார் தம்முடைய போராட்ட வடிவத்தை மாற்றவேண்டும் என்று அன்போடு கோருகிறேன். இனப்படுகொலைக்கு நீதியைப் பெறவேண்டும் என்ற நோக்கில் அம்மையார் அம்பிகை முன்னெடுக்கும் அறப்போராட்டத்திற்கு உலகெங்கும் வாழும் தமிழர்கள் ஆதரவு கொடுத்து, இனத்திற்கான கோரிக்கைகள் வெல்லத் துணைநிற்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்திருக்கிறார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com