முகிலன் எங்கே? - இந்திய அரசுக்கு ஐநா மனித உரிமை கவுன்சில் கேள்வி
காணாமல் போன சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலனை கண்டுபிடிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என இந்திய அரசிடம் ஐநா மனித உரிமை கவுன்சில் விளக்கம் கேட்டுள்ளது.
ஈரோட்டை சேர்ந்த சுற்றுச்சூழல் மற்றும் மனித உரிமை ஆர்வலரான முகிலன், கடந்த பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி காணாமல் போனார். இது தொடர்பாக மனித உரிமை காப்பாளர் கூட்டமைப்பு ஐநா மனித உரிமை கவுன்சிலுக்கு புகார் அனுப்பி இருந்தது. இந்த புகாரின் மீது விசாரணை நடத்திய ஐநா சிறப்பு பிரதிநிதிகள் விளக்கம் கேட்டு இந்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
அதில் முகிலன் மாயமானது குறித்து நடத்தப்பட்ட விசாரணை விவரங்களை ஐநா மனித உரிமை கவுன்சில் கேட்டுள்ளது. முகிலன் சமாதியாகி விட்டதாக சமூக வலைதளத்தில் பதிவிட்ட ராஜபாளையம் காவல் ஆய்வாளர் மீது விசாரணை நடத்தப்பட்டதா? அப்படி நடந்திருந்தால் விசாரணை விவரங்களை வழங்க வேண்டும் இல்லையெனில் ஏன் விசாரணை நடக்கவில்லை என்ற விளக்கத்தை அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் சுற்றுச்சூழல் மற்றும் மனித உரிமை பாதுகாவலர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.