உளுந்தூர்பேட்டை | விபரீத முடிவெடுத்த என்எல்சி ஊழியர்: மனைவி மகன் மர்ம மரணம் - போலீசார் விசாரணை
செய்தியாளர்: ஆறுமுகம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அஜீஸ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்து. இவர், நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் பணிபுரிந்து வருகிறார். குடும்பத்தினருடன் என்எல்சி தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் இவர், தனது சொந்த ஊரான உளுந்தூர்பேட்டை அருகே உள்ள அஜீஸ் நகர் சாலையோரம் உள்ள மரத்தில் தூக்கில் தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில், அவரது மனைவி தேவி மற்றும் மகன் பிரவீன் குமார் ஆகிய இருவரும் முத்து தற்கொலை செய்து கொண்ட இடத்திற்கு அருகே உள்ள குட்டையில் சடலமாக மிதந்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எடைக்கல் போலீசார், சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முத்து தற்கொலை செய்து கொண்ட நிலையில், மனைவியும் மகனும் சடலமாக குட்டையில் மிதந்தது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து முத்து இருவரையும் கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது மனைவி மகன் தற்கொலை செய்து கொண்ட விரக்தியில் தானும் தற்கொலை செய்து கொண்டாரா? வேறு ஏதேனும் காரணமா எனவும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.