உளுந்தூர்பேட்டை | அரசு மருத்துவமனையில் இரு தரப்பினரிடையே மோதல்... பின்னணி என்ன?
செய்தியாளர்: ஆறுமுகம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள உ.செல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன். இவரது குடும்பத்தினருக்கும், ஏழுமலை என்பவரது குடும்பத்தாருக்கும் இடையே கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு நிலத்தில் மாடுகள் மேய்ந்து தொடர்பாக பிரச்னை ஏற்பட்ட நிலையில், தொடர்ந்து முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று மாலை ஏழுமலை தரப்பைச் சேர்ந்த சேகர் என்பவரை மோகன் ஆபாச வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஏழுமலை தரப்பினருக்கும் மோகன் தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டு தடி மற்றும் உருட்டு கட்டையால் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர் இதில், பலத்த காயமடைந்த இருதரப்பினரும் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தனர் அப்பொழுது ஒரே நேரத்தில் இரு தரப்பும் இருந்ததால் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு அது முற்றி கண்மூடித்தனமாக தாக்கிக் கொண்டனர்
இந்த தாக்குதல் சம்பவம் மருத்துவமனையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. தகவல் அறிந்து சம்பவத்திற்கு வந்த உளுந்தூர்பேட்டை போலீசார், இரு தரப்பைச் சேர்ந்தவர்களையும் விசாரித்து வருகின்றனர்.