சென்னை சில்க்ஸில் விதிமீறல்: 4 மாடிக்கு அனுமதி வாங்கி 8 மாடி!
நான்கு மாடிக்கு அனுமதி வாங்கிவிட்டு 8 மாடிகளை கட்டியதாக சென்னை சில்க்ஸ் நிறுவனம் மீது அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் புகார் தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் நடைபெற்றுள்ள விதிமீறல் குறித்து விவரித்தார். 4 மாடிகளை கட்டுவதற்காக அனுமதி வாங்கிவிட்டு தரைத்தளம் உள்ளிட்ட 8 மாடிகளை அவர்கள் கட்டியுள்ளனர். விதிகளை மீறி கட்டடம் கட்டியது தொடர்பாக சென்னை சில்க்ஸ்-க்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும் கட்டடத்தில் 5,6,7-ஆவது மாடிகளை இடிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் கட்டட இடிப்புக்கு எதிராக சென்னை சில்க்ஸ் நீதிமன்றத்தில் தடை வாங்கியது. இதனால் சென்னை சில்க்ஸ் கட்டட இடிப்பு பணி நிறுத்தப்பட்டது. கட்டட நிறைவு சான்றிதழை சென்னை சில்க்ஸ் இதுவரை அரசிடம் இருந்து பெறவில்லை. தி.நகரில் விதிமுறைகளை மீறி 86 கட்டடங்கள் கட்டுப்பட்டுள்ளன. இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டடம் மீது விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். முதலமைச்சர் உடனான ஆலோசனையின் பேரில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தி.நகர் கட்டட விதிமுறை மீறல் பிரச்னை கடந்த 20 வருடங்களாக உள்ளது. தற்போது பாதுகாப்பு நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும்’ என்று தெரிவித்தார்.
சென்னை தி.நகரில் உள்ள சென்னை சிக்ஸ் துணிக்கடையில் நேற்று அதிகாலை 4.45 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்து இன்றுவரை நீடித்தது. தீயை அணைக்கும் பணியில் கிட்டத்தட்ட 450-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். இதுதொடர்பாக சென்னை மாம்பலம் காவல்நிலையத்திலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், சென்னை சில்க்ஸ் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்தார்.