ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த திருப்பூர் பெண்.. சொந்த ஊரில் உடல் தகனம்!
செய்தியாளர்: தி.கார்வேந்தபிரபு.
திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் செயல்பட்டு வரும் விவேகானந்தா வித்யாலயா பள்ளி தாளாளர் மூர்த்தி என்பவரின் மகள் காமாட்சி தேவி (28). இவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இவர், நேற்று நடைபெற்ற ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக டிக்கெட் பெற்று சின்னச்சாமி மைதானத்திற்குச் சென்றுள்ளார். அப்போது, கூட்ட நெருசலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து இவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பிறகு சொந்த ஊரான உடுமலைப்பேட்டை அருகே உள்ள மைவாடி பகுதிக்கு கொண்டுவரப்பட்டது. இதைத் தொடர்ந்து விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் காமாட்சி தேவியின் உடல் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அப்போது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலை செலுத்தினர்.
இதைத் தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், மற்றும் தற்போதைய பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி, நடிகர் தாமு உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில், இவரது உடல் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு உடுமலை மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.