"அண்ணா பெயரில் உள்ள கட்சி இல்லை அதிமுக; அமித்ஷா பெயர் தாங்கிய கட்சி" – உதயநிதி விமர்சனம்

தனித்தனியாக தேர்தலில் தொடர்ந்து தோல்வியடைந்து வருவதால் ஒரே நேரத்தில் அனைத்திலும் தோல்வியடைந்தால் நிம்மதியாக இருக்கும் என்பதால் அதிமுக ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஆதரவு அளித்துள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்PT Web

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இந்த நிகழ்வில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் சேகர் பாபு, சட்டமன்ற உறுப்பினர் எழிலன் மற்றும் திராவிட கழக தலைவர் கி.வீரமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

கி.வீரமணி
கி.வீரமணிPT Desk

இந்த நிகழ்சியில் திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி பேசியபோது.... " இன்று இந்தியாவில் தமிழகத்தின் வரலாற்று பொன்நாள். மனிதத்திற்கு விரோதமானது சனாதனம். எனவேதான் இந்த மாநாடு உலகத்திற்கே வழிகாட்டக் கூடிய மாநாடு என்று கூறுகிறேன். ரோகிணி போன்ற முற்போக்கு கருத்தாளர்கள் இருப்பது அபூர்வமானது. அமைச்சர் சேகர்பாபு செல்போனில் ரோகிணி பெயரை பதிவு செய்தபோது சிபிஎம் என வந்தது. அதுதான் அவருக்கான அடையாளம்.

சனாதன ஒழிப்பு மாநாட்டிற்கு அமைச்சர் சேகர்பாபு, காவி வேட்டியில் வந்துள்ளார். எங்களுக்கு எந்த நிறத்தின் மீதோ தனிநபர் மீதோ வெறுப்பு கிடையாது. இந்த மாநாடு சனாதன எதிர்ப்பு மாநாடாக இல்லாமல் சனாதன ஒழிப்பு மாநாடாக நடைபெறுவது சிறப்பானது. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாசாரம், ஒரே தேர்தல், ஒரே குடும்ப அட்டை என நிறுவுபவர்கள் ஏன் ஒரே மதம், ஒரே சாதி என்று கூற மனம் வராமல் இருக்கிறார்கள். ஏனென்றால் உங்களுடைய இனம் குறுக்கே நிற்கிறது. உங்களை இயக்குவது சனாதனம் என்கிற இந்துத்துவம்.

ஆர்.என்.ரவி
ஆர்.என்.ரவிPT Web

இப்போது பல தேர்தல் நடைபெறுவதால் செலவு அதிகரிப்பதாக கூறுகின்றனர். பின்வரும் காலங்களில் தேர்தலே வேண்டாம் செலவு உள்ளதாக கூறுவார்கள். அவ்வாறு சனாதனத்தை நிறுவ முயற்சிக்கின்றனர். சனாதனம் என்பது உழைக்கும் மக்களுக்காகவா?

ஆளுநராக உள்ளவர் அரசியல் சட்டத்தை, உறுதிமொழியை பற்றி கவலைப்படாமல் சனாதனத்தை பெருக்க வேண்டும் என கூறுகிறார். நாங்கள் ஆதாரத்துடன் பேசுபவர்கள். அவர்களைப் போல் கயிறு திரிப்பவர்கள் அல்ல. சனாதானத்திற்கு மூலாதாரம் வேதங்களை கொண்டது. இதற்கு ஆரிய மதம் என்று பெயர். சனாதனம் நம்மை மனிதர்களாகவே மதிக்கவில்லை. ஆரியத்திற்கு மேன்மை பொருந்தியது என பொருள்.

இந்து மதமும் சனாதனமும் வெவ்வேறு அல்ல. சனாதனத்திற்கு எதிராக பேசிய வள்ளலாரை சனாதனத்தின் உச்சம் என ஆளுநர் கூறுகிறார். மக்கள் அனைவரும் சமம். அனைவருக்கும் வாய்ப்பு சமமாக அமைய வேண்டும். ரிஷிகளுக்கு ராக்கெட் என்றால் என்னவென்று தெரியுமா? பகுத்தறிவு மூலமே ஒலிப்பெருக்கிகள், ராக்கெட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. சனாதனம் என்றால் மாறாதது எனக் கூறுபவர்கள் ரஃபேலுக்கு பதிலாக ராமரின் ஆயுதத்தை பயன்படுத்தாலமே. சிக்கனமாக இருக்கும் பிரதமர் ஏன் விமானத்தில் பயணிக்க வேண்டும்?

PM Modi
PM Modi Twitter

சனாதனம் சமத்துவத்திற்காகவே அழிக்கப்பட வேண்டும். நீட் தேர்வு போன்றவற்றின் மூலம் படிப்பை தடுக்கின்றனர். சனாதன ஒழிப்பு மாநாடு சரியான நேரத்தில் தொடங்கப்பட்டுள்ளது. அரசியல் செயல்பாடாக மும்பையில் இந்தியா கூட்டணி சந்திப்பு நடந்துள்ளது. 6 மாதத்தில் கட்டாயம் ஆட்சி மாற்றம் ஏற்படும். அடுத்த தேர்தலை விட நம் அடுத்த தலைமுறைதான் முக்கியம். போருக்கு தயாராவதுபோல் ஆயுதங்களுடன் நாம் தயாராக இருக்க வேண்டும். பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் போன்றவர்களை ஆயுதங்களாக்கி இளையோர்களுக்கு அதனை பழக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

கி.வீரமணியை தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியபோது... கொசு, டெங்கு, மலேரியா போன்றவற்றை எதிர்க்கக் கூடாது. ஒழிக்க வேண்டும் அதேபோல்தான் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும். சனாதனம் என்றால் நிலையானது, மாற்ற முடியாது என்பதுதான்; எதையும் மாற்ற முடியும், கேள்வி கேட்க முடியும் என்பதற்காக உருவானது திமுக மற்றும் கம்யூனிஸ்ட்.

cm stalin
cm stalinfile image

பள்ளியில் காலையில் உணவு வழங்குவதால் கக்கூஸ் நிரம்பி வழிகிறது என செய்தி போடுகின்றனர். இன்று 17 லட்சம் மாணவர்கள் காலை உணவு திட்டத்தால் பயனடைந்து வருகின்றனர், நானும் அதில் ஒரு பயனாளிதான் எந்த ஊருக்கு சென்றாலும் நானும் மாணவர்களுடன் உணவு சாப்பிட்டு வருகிறேன். மக்களை சாதி ரீதியாக பிரித்து வைப்பது சனாதனம், அனைத்து மக்களையும் ஒன்றாக குடி வைக்க திமுக ஆட்சியில் சமத்துவபுரம் உருவாக்கப்பட்டது. வீட்டுப் படியை கூட தாண்டக் கூடாதென அடைத்து வைத்தது சனாதனம். ஆனால், இன்று நீளம் தாண்டுதல் உயரம் தாண்டுதல் போட்டிகளில் பெண்கள் சாதனை புரிந்து வருகின்றனர்.

மக்களை முன்னேற்றும் திட்டங்களை திமுக செயல்படுத்தி வருகிறது, மக்களை பின்னோக்கி அழைத்து செல்கிறது பாஜக. கடந்த 5 மாதங்களாக மணிப்பூர் மாநிலத்தில் கலவரம் நடைபெற்று வருகிறது. அதை இன்னும் கட்டுபடுத்தவில்லை. குலக்கல்வித் திட்டத்தை காமராஜர் ஒழித்தார், அதே காமராஜர் அரங்கில் இருந்து நாம் உரிமையாக குரல் கொடுப்போம். ஒன்றிய அரசு கொண்டு வரும் விஸ்வகர்மா திட்டத்தை திமுக கடுமையாக எதிர்க்கும், விஸ்வகர்மா திட்டத்தை கொண்டு வரும் நரேந்திர மோடி தோற்கடிக்கப்படுவார்.

EPS
EPSpt desk

நீட் தேர்வை ஒழிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம், நீட் தேர்வை ஒழிக்க நான் ஒருவன் மட்டும் போராடினால் போதாது. நீங்கள் அனைவரும் அதற்காக போராட வேண்டும், நீட் தேர்வுக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் வெற்றி ஆனால், நீட் ரத்து செய்யப்பட்டால் மட்டுமே உண்மையான வெற்றி கிடைக்கும் என்று பேசினார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியபோது....

AmitShah
AmitShahpt desk

" ஆட்சியில் இருக்கும் நேரத்தில் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்தது அதிமுக. 2019 நாடாளுமன்ற தேர்தல் தோல்வி, 2021 சட்டமன்ற தேர்தல் தோல்வி, உள்ளாட்சி தேர்தல் தோல்வி என தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்து வருகின்றனர். எனவே ஒரே நேரத்தில் அனைத்து தேர்தலிலும் தோல்வி அடைந்தால் பிரச்னை இல்லை என்பதற்காக தற்போது ஆதரவு தெரிவித்துள்ளனர்.

திமுக எதிர்க்கட்சியாக இருந்த நேரத்திலும் எதிர்ப்பு தெரிவித்தோம் தற்போதும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். அதிமுக அண்ணா பெயரில் உள்ள கட்சி இல்லை அமித்ஷா பெயர் தாங்கிய கட்சி" என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com