அமைச்சராக நாளை மறுநாள் பதவியேற்கிறார் உதயநிதி?.. தயாராகும் அறை முதல் இலாகா மாற்றம் வரை!

அமைச்சராக நாளை மறுநாள் பதவியேற்கிறார் உதயநிதி?.. தயாராகும் அறை முதல் இலாகா மாற்றம் வரை!
அமைச்சராக நாளை மறுநாள் பதவியேற்கிறார் உதயநிதி?.. தயாராகும் அறை முதல் இலாகா மாற்றம் வரை!

தமிழகத்தின் புதிய அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நாளை மறுநாள் பதவியேற்க உள்ளதாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகனும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சிறிது காலம் எம்.எல்.ஏ.வாக இருந்த அவரை அமைச்சராக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 27-ந் தேதி உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் வந்தது. அதற்காக, அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள், இதற்கு முந்தைய பிறந்த நாட்களில் இல்லாத வகையில் முக்கியத்துவம் அளித்து, காத்திருந்து உதயநிதி ஸ்டாலினை வாழ்த்திவிட்டுச் சென்றனர்.

இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின் விரைவில் அமைச்சரவையில் சேர்க்கப்படுவார் என்ற உறுதியான தகவல்கள் வந்துள்ளன. 14-ந் தேதி காலை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்பார் என்றும், கவர்னர் ஆர்.என்.ரவி அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பார் என்றும் தெரிகிறது. இதற்காக கவர்னரின் நேரத்தைப் பெறுவதற்காக ஏற்கனவே ராஜ்பவனுக்கு சம்பந்தப்பட்ட சில உயரதிகாரிகள் சென்று கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசியுள்ளனர்.

அவரிடம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறையை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. அந்த வகையில் தமிழக அமைச்சரவை விஸ்தரிக்கப்பட்டு புதிய அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இணைகிறார்.

தயாராகும் அறை

இந்த நிலையில், அவருக்கு தலைமைச் செயலகத்தின் பிரதான கட்டிடத்தில் அமைச்சர் அறையை தயார் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அங்குள்ள 2-வது தளத்தில் அமைச்சர்கள் பொன்முடி, சக்கரபாணி அறைகளுக்கு அருகே அறை தயார் செய்யப்பட்டு வருகிறது. அந்த இடத்தில் ஏற்கனவே சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையைச் சேர்ந்த அலுவலர்கள் பணியாற்றி வந்தனர். அவர்களுக்கு 2-ம் தளத்தில் இருந்த டெல்லிப் பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயனின் அறை ஒதுக்கப்பட்டுள்ளது. டெல்லிப் பிரதிநிதிக்கு 10-வது நுழைவு வாயில் அருகேயுள்ள அறை ஒதுக்கப்படுகிறது. தற்போது அந்த அறையை தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

உதயநிதி ஸ்டாலினுக்கு ஒதுக்கப்படும் அறையை கடந்த 2 நாட்களாக 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இணைந்து தயார் செய்து வருகின்றனர். இதற்காக தனியார் நிறுவனம் ஒன்றுக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் முன்பு அறையை தயார்செய்து முடிக்கும்படி பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. எனவே இரவும் பகலுமாக பணி தொய்வின்றி நடைபெற்று வருகிறது. அவரது அறைக்கு வெளியே தொங்கவிடப்படும் பெயர்ப் பலகையை தயார் செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இலாகா மாற்றம்

கவர்னர் மாளிகையில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்பதற்கான அறிவிப்பு வரும் அன்றைய தினத்திலேயே சில அமைச்சர்களின் இலாகாக்களில் மாற்றம் செய்யப்பட்டு, கவர்னர் மாளிகையில் இருந்து அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

- ரமேஷ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com