“விமானி இல்லாமல்கூட மோடி போவார்.. ஆனால் அதானி இல்லாமல் போக மாட்டார்”-உதயநிதி ஸ்டாலின் பேச்சு

“மோடி விமானி இல்லாமல் போவார் ஆனால் அதானி இல்லாமல் போக மாட்டார்” என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குன்றத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.
Udhayanithi Stalin
Udhayanithi StalinPT

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் குன்றத்தூரை அடுத்த பெரிய பனிசேரியில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவச்சிலை மற்றும் கலைஞர் படிப்பகம் ஆகியவற்றை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

“மோடி விமானி இல்லாமல் போவார்.. அதானி இல்லாமல் போகமாட்டார்..”

பின்னர் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி, “தற்போது நடந்த பொதுக் கூட்டத்தின் இடம் சிறியது என அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறினார். இடம் சிறியது, ஆனால் அவரது மனம் பெரியது. எந்த குறையும் அவரிடம் நான் கண்டது இல்லை, எல்லாம் நிறை மட்டுமே. கலைஞரால் பேச முடியாத நிலையிலும் கடைசி வரை அண்ணா என பேசினார். வார்த்தை என எழுத சொன்னால் அண்ணா என்ற வார்த்தைதான் எழுதினார். சிற்பிதான் சிலையை செதுக்குவார். அப்படி தமிழ்நாட்டை செதுக்கிய கலைஞர் எனும் சிற்பிக்கு இங்கு சிலை வைக்கிறோம். இதை நான் திறந்து வைப்பதில் பெருமகிழ்ச்சி”

கலைஞர் கருணாநிதி
கலைஞர் கருணாநிதி

“அதிமுக, திமுகவிற்கு இடையே வித்தியாசம் காணலாம். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை கோடி கணக்கில் செலவு செய்தனர். ஆனால் மக்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. இப்போது அப்படியல்ல. ஏனெனில் தமிழகத்தில் இப்போது ஆட்சி செய்வது மக்களால் தேர்வு செய்யப்பட்ட முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் ரெய்டு நடத்தி உள்ளனர். அதை வைத்து அவர்களை மிரட்டி வருகின்றனர். அதிமுக, பாஜக இருவரும் கூட்டு களவாணிகள். பாஜக ஆட்சியில் அதானி குடும்பம் மட்டும் தான் வாழ்ந்து வருகிறது, அவர் மோடியின் நெருங்கிய நண்பர். மோடி விமானி இல்லாமல் போவார் ஆனால் அதானி இல்லாமல் போக மாட்டார்.

எந்த மொழிக்கும் எதிர்ப்பு இல்லை இந்தி திணிப்புக்கு தான் எதிர்ப்பு!

எந்த மொழிக்கும் இங்கு எதிர்ப்பு இல்லை. இந்தி திணிப்புக்கு தான் எதிர்ப்பு. பாஜக அலுவலகம் தி.நகரில் உள்ளது. இந்தி பிரச்சார சபா அங்கு உள்ளது. அங்கு சென்று இந்தி கற்று கொள்ள வேண்டியது தானே. முதுகெலும்பு என்றால் என்ன என்பது தெரியாது என்பதை அதிமுக மீண்டும் உறுதி செய்துள்ளது” என்றுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி, காஞ்சிபுரம் மாவட்ட சேர்மன் மனோகரன், குன்றத்தூர் ஒன்றிய செயலாளர் வந்தேமாதரம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com