\
Udhayanidhi Slams Keerthana Over Viral School Reel
உதயநிதி - கீர்த்தனாPt web

”ரீல்ஸ் மோகத்துக்கு குழந்தைககளைப் பயன்படுத்தாதீர்கள்” - அமைச்சருக்கு உதயநிதி கண்டனம்

அமைச்சர் கீர்த்தனா, அரசுப்பள்ளி ஒன்றில் ஆய்வில் ஈடுபட்டிருந்த போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், ”ரீல்ஸ் மோகத்துக்கு குழந்தைககளைப் பயன்படுத்தாதீர்கள்” என எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
Published on

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைத்திருக்கும் நிலையில், அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் மற்றும் தவெக நிர்வாகிகள் மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்ததுடன் அதனை வீடியோ பதிவு செய்து சமூக ஊடகங்களில் வெளியிட்டுவருகின்றனர். இதையடுத்து, தவெக அரசை எதிர்க்கட்சிகள் ரீல்ஸ் ஆட்சி என விமர்சித்து வருகின்றனர்.

இந்தசூழலில் தான், சமீபத்தில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கலில் உள்ள அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, வகுப்பறையில் படித்துக் கொண்டிருந்த மாணவி ஒருவரிடம் ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பினார். ஆனால், அந்த மாணவி பதில் சொல்ல முடியாமல் திணறியிருந்தார். தொடர்ந்து, அருகில் இருந்த ஆசிரியரிடம் முதல் வரிசை மாணவர்களே இவ்வாறு இருந்தால், கடைசி வரிசை மாணவர்களை யோசித்து பாருங்கள் எனவும் தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், அமைச்சரின் இந்த செயலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த விவகாரம் குறித்துப் பேசியிருந்த முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ”தான் நினைப்பதுதான் சரி என பிடிவாதம் பிடிப்பது ஆய்வின் பணி அல்ல. அமைச்சரின் பணியும் அதுவல்ல. மாணவச் செல்வங்களிடம் தாழ்வு மனப்பான்மையை வளர்க்காதீர்கள்” என தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து இந்த விவகாரம் குறித்துப் பேசியிருந்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், ஆய்வு என்ற பெயரில் தவெகவினர் நடத்தும் அட்டூழியங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் நேர்காணல் நடத்தும் ஸ்ட்ரிக்ட் கார்ப்பரேட் முதலாளி போல, படிக்கும் பிள்ளைகளிடம் துருவித் துருவி கேள்விகள் கேட்டு அவர்களைத் திணற வைப்பதற்கும், அங்குள்ள ஆசிரியர்களைக் குற்றவாளி கூண்டில் நிறுத்தி மகிழ்வதற்கும் பெயர் “ஆய்வு” கிடையாது, அராஜகம் எனத் தெரித்திருந்தார்.

இந்தசூழலில் தான், இந்த விவகாரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், அரசுப்பள்ளியில் ஆங்கிலப் புலமையை ஆய்வு செய்கிறேன் என்ற பெயரில் ‘ரீல்ஸ் அமைச்சர்’ ஒருவர் பிஞ்சுக் குழந்தையிடம் நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியும் அருவருப்பும் அளிக்கிறது. மாணவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எந்தச் சூழ்நிலைகளில் கேமராக்களைத் தவிர்க்க வேண்டும் என அமைச்சருக்குத்தான் முதலில் Class எடுக்க வேண்டும். நம் குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கை ஊட்டுவது தான் நமது வேலை. மாறாக, அவர்களின் தன்னம்பிக்கையை உடைப்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. உங்கள் விளம்பர வெறியை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். ரீல்ஸ் மோகத்துக்குப் பள்ளிக்குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

Udhayanidhi Slams Keerthana Over Viral School Reel
நெம்மேலி | கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்.. விரிவாக்கப் பணியை பார்வையிட்ட முதல்வர் விஜய்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com