
திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் நேற்று பல்வேறு அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடைசி நிகழ்ச்சியாக திருப்பத்தூர் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைப்பெற்ற திமுக கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் திமுகவை சேர்ந்த 200 மூத்த உறுப்பினர்களுக்கு பொற்கிழியை வழங்கினார். இதனைத் தொடர்ந்து விழாவில் பேசிய அமைச்சர், “இங்குள்ள பெரியோர்களை பார்க்கும் போது கலைஞரை பார்ப்பது போல் தெரிகிறது. இன்று தமிழகத்தில் திமுக ஆட்சி செய்வதற்கு முக்கிய காரணம் நீங்கள் தான். தற்போது அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மிசாவை பார்த்தவர்கள் திமுகவினர். இந்த ED சோதனைக்கெல்லாம் பயப்படமாட்டோம்.
1975 ஆம் ஆண்டு கோபாலபுரத்தில் கலைஞர் தங்கியுள்ள வீட்டை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வீட்டை அளக்கவேண்டும் என கூறினர். அப்போது உதயநிதி ஸ்டாலின், “உங்களை இங்கு அனுப்பியவர் எம்.ஜி.ஆர். தான். அவருக்கு தெரியாதா நான் இந்த வீட்டை 1956லேயே வாங்கிவிட்டேன் என்று” எனக் கூறி சோதனை செய்ய வந்த அதிகாரிகளுக்கு டீ போட சொல்லிவிட்டு முரசொலி மாறன் வீட்டிற்கு சென்று கழக உடன் பிறப்புகளுக்கு கடிதம் எழுதியவர் தான் கலைஞர்.
ஏராளமான சோதனைகளைப் பார்த்தவர்கள் திமுகவினர். இந்த சிபிஐ, ED, IT எல்லாம் எம்மாத்திரம்? முன்னாள் அதிமுக அமைச்சர்கள் விஜயபாஸ்கர், தங்கமணி, வேலுமணி ஆகியரது வீட்டில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். ஆனால் இதுவரையில் ஒன்றிய பாஜக அரசு அவர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிமுகவை தன் கையில் வைத்திருந்திருந்தது பாஜக. அதுபோன்ற ஒரு வேலையை திமுகவிடமும் செய்து பார்க்கலாம் என நினைக்கிறது ஒன்றிய பாஜக அரசு. அது உங்கள் கனவிலும் நினைவாகாது.
எங்கள் தலைவர் எடப்பாடி பழனிசாமியோ அல்லது ஓ.பன்னீர்செல்வமோ கிடையாது. எங்கள் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். கலைஞரின் மகன்.
பிஎம் கேஸ் என்ற பெயரில் கொரோனா காலகட்டத்தில் வசூல் செய்த 32 ஆயிரம் கோடிக்கு ஒன்றிய மோடி அரசு இதுவரையில் கணக்குகாட்டவில்லை. கொரோனா பெயரை சொல்லி கொள்ளையடித்தவர்கள் பாசிச பாஜகவினர். ஆனால் எங்கள் முதல்வர், மோடியை போன்றவர் அல்ல. சட்டமன்றத்தில் கொரோனா காலத்தில் வசூலான நிதிக்கு வெள்ளையறிக்கை வெளியிட்டு அனைத்தையும் வெளிப்படையாக சொன்னவர் நம் முதல்வர்.
மீண்டும் பாஜக ஆட்சியமைத்தால் இந்தியாவை காப்பற்ற முடியாது. அதனை எதிர்க்கவே பெங்களூரில் 24 கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. மேலும் இது (பொற்கிழி வழங்கும் நிகழ்வு) உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சியில்லை. பேரன் தனது தாத்தா பாட்டியிற்கு செய்யும் கடமை” என கூறினார்.
இந்நிகழ்வில் பொதுப்பணி, நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஏ.வ.வேலு திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, ஆம்பூர், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.