கூட்டணிக் கட்சித் தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்ற உதயநிதி
திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
திமுக இளைஞரணிச் செயலாளார் உதயநிதி ஸ்டாலின் முதன்முறையாக சட்டமன்ற உறுப்பினர் ஆகியுள்ளதையொட்டி கூட்டணிக் கட்சித் தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பியை சந்தித்து வாழ்த்து பெற்றவர், மதிமுக பொதுச்செயலாளரும், எம்பியுமான வைகோவை அவரது அண்ணா நகர் இல்லத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். அப்போது "தாத்தாவை மிஞ்சிய பேரன்" என உதயநிதிக்கு வைகோ புகழாரம் சூட்டினார். திருச்சி திருவெறும்பூர் எம்எல்ஏ மகேஷ் பொய்யாமொழியும் அங்கு சென்று வாழ்த்துப் பெற்றார்.
அங்கிருந்து பெரியார் திடலில் உள்ள தந்தை பெரியாரின் நினைவிடத்தில் சேப்பாக்கம் தொகுதியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வைத்து உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியை நேரில் சந்தித்து வெற்றிச் சான்றிதழை காண்பித்து வாழ்த்துப் பெற்றார். அங்கிருந்து மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனை மாநிலக்குழு அலுவலகத்திலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசனை அக்கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்திலும் சந்தித்து அவர் வாழ்த்து பெற்றார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியை அவரது இல்லத்தில் சந்தித்த உதயநிதி ஸ்டாலின், அவரிடமும் வாழ்த்துப் பெற்றார். தமிழக வாழ்வுரிமைக் கட்சித்தலைவர் வேல்முருகனை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்ற உதயநிதி, பண்ருட்டி தொகுதியில் அவர் பெற்ற வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார்.