”அப்பா, மகன், பேரன், கொள்ளு பேரன் என திமுகவில் தான் பதவிக்கு வர முடியும்” - கடம்பூர் ராஜு

”அப்பா, மகன், பேரன், கொள்ளு பேரன் என திமுகவில் தான் பதவிக்கு வர முடியும்” - கடம்பூர் ராஜு
”அப்பா, மகன், பேரன், கொள்ளு பேரன் என திமுகவில் தான் பதவிக்கு வர முடியும்” - கடம்பூர் ராஜு

நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததும் உதயநிதி ஸ்டாலின் தான் தமிழக முதல்வர் என்றும், எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று அண்ணா சொன்னது திமுகவினருக்கு தான் என்றும் விமர்சித்துள்ளார், முன்னாள் அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ.

திமுக குடும்பத்தில் 9 முதல்வர்கள் இருக்கின்றனர், நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததும் உதய நிதி ஸ்டாலின் தான் தமிழக முதல்வர். இதையெல்லாம் திமுகவினர் பார்க்க வேண்டிய நிலை இருப்பதால் தான் அண்ணா அன்றே எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று திமுகவினருக்கு சொல்லி சென்றுள்ளார் என்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் திமுக அரசினை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர்.செ.ராஜூ தெரிவித்துள்ளார்.

சொத்து வரி உயர்வு, மின்கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதை கண்டித்தும், உயர்த்தப்பட்ட கட்டணங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் அதிமுக சார்பில் 3 கட்டங்களாக தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு, முதல் கட்டமாக பேரூராட்சி, 2வது கட்டமாக மாநகராட்சி, நகராட்சி பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றநிலையில், இன்று 3வது கட்டமாக ஒன்றிய பகுதியில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர்.செ.ராஜூ தலைமையில் இ.எஸ்.ஐ. மருந்தகம் எதிரே திமுக அரசினை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் கடம்பூர்.செ.ராஜூ பேசுகையில், அதிமுக ஆட்சியில் காவல்துறை சிறப்பாக செயல்பட்டு இந்திய அளவில் விருதுகள் பெற்றது. ஆனால் இன்றைக்கு காவல்துறை செயல்படமுடியாத நிலை உள்ளது. திமுக குடும்பத்தில் 9 முதல்வர்கள் உள்ளது தான் இதற்கு காரணம், ஆகையால் தான் முதல்வர் மு.க.ஸ்டாலினை பொம்மை முதல்வர் என்று நாங்கள் கூறுகிறோம். உதயநிதி ஸ்டாலின், தந்தை பெரியார், அண்ணா கொள்கையில் வளர்ந்தவர்(நகைச்சுவையுடன்). அதனால் தான் அண்ணா எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று மக்களுக்காக சொல்லவில்லை, திமுகவினர்க்கு தான் சொல்லி சென்றுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பார்க்க வேண்டிய நிலைக்கு திமுகவினர் தள்ளப்பட்டுள்ளனர். அண்ணன் உதயநிதி ஸ்டாலின் தான், ராபின்சன் பூங்காவில் அண்ணாவுடன் இணைந்து திமுகவை தொடங்கியவர், பெரியாருக்கு கொள்கைகளை வகுத்து கொடுத்துவர், இவ்வளவு கேவலமாக போய் விட்டது திமுக என்று விமர்சித்தார்.

மேலும் இது உதயநிதிக்கு பட்டாபிஷேக விழா கிடையாது, திமுக ஆட்சிக்கு முடிவு கட்டும் விழா. அப்பா, மகன், பேரன், கொள்ளு பேரன் என திமுகவில் தான் பதிவிக்கு வர முடியும், அதிமுகவில் சாதராண தொண்டன் கூட முதல்வர் பதவிக்கு வரமுடியும். நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததும் உதய நிதி ஸ்டாலின் தான் தமிழக முதல்வர். ஏனென்றால் ஸ்டாலினால் முடியவில்லை, அவரே அதை சொல்கிறார், தன்னால் நிம்மதியாக தூங்க கூட முடியவில்லை என்று திமுக பொதுக்குழுவில் அவர் தான் கூறியுள்ளார். தன்னால் நிம்மதியாக தூங்க முடியவில்லை என்று இந்தியாவில் சொன்ன ஒரே ஒரு நம்பர் 1 முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் என்று கூறினார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com