கிரானைட் முறைகேடு அறிக்கையை சந்தேகிப்பது எனது நேர்மையை சந்தேகிப்பதற்கு ஒப்பானது: சகாயம்
கிரானைட் முறைகேடு குறித்து தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை சந்தேகிப்பது, தமது நேர்மையை சந்தேகிப்பதற்கு ஒப்பாகும் என ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நடந்த கிரானைட் முறைகேடு குறித்து கடந்த நவம்பர் 2015-ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையிலான குழு தனது அறிக்கையை தாக்கல் செய்தது. அதில் ஒரு லட்சத்து 16 ஆயிரம் கோடி ரூபாய்க்கு கிரானைட் முறைகேடு நடந்திருப்பதாக தெரிவித்திருந்தது.
இந்த சூழலில் விசாரணை குழுவில் இடம் பெற்றிருந்த ஓய்வு பெற்ற தாசில்தார் மீனாட்சி சுந்தரத்துக்கு கடந்த 8 மாதங்களாக ஊதியம் வழங்காததை நீதிமன்றத்தின் கவனத்துக்கு சகாயம் குழு கொண்டு சென்றது. தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம். சுந்தர் அடங்கிய அமர்வு முன் இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கிரானைட் அதிபர்கள் சங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அறிக்கை தாக்கல் செய்ததுடன் சகாயம் குழுவின் பணி முடிந்து விட்டது. ஒரு லட்சத்து 16 ஆயிரம் கோடி ரூபாய்க்கு கிரானைட் முறைகேடு நடந்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருப்பதில் உண்மை இல்லை என்று வாதாடினார்.
அப்போது குறுக்கிட்ட சகாயம் குழு வழக்கறிஞர் எம்.ராதாகிருஷ்ணன், விசாரணை குழுவின் அறிக்கையை சந்தேகிப்பது சகாயத்தின் நேர்மையை சந்தேகிப்பதற்கு ஒப்பானது. விசாரணை குழுவின் பணி முடிவடைந்ததா? என்பதை நீதிமன்றம்தான் தீர்மானிக்க வேண்டும் என்று வாதாடினார்.
இதனையடுத்து அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜகோபால், தாசில்தாருக்கு ஊதியம் வழங்காதது குறித்து அரசிடம் விளக்கம் கேட்டு தெரிவிப்பதாக கூறினார். பின்னர் வழக்கு விசாரணையை நீதிபதிகள் நாளைக்கு ஒத்தி வைத்தனர்.