சென்னையில் மூச்சுத் திணறலால் இறந்த 2 பெண்கள் : பரிசோதனை முடிவில் கொரோனா
(கோப்பு புகைப்படம்)
சென்னையில் மூச்சுத் திணறலால் இறந்த 2 பெண்களின், ரத்த மாதிரிகள் பரிசோதனை முடிவில் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் 11,224 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 6,750 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நேற்று வரை 78 பேர் கொரோனா வைரஸால் இறந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் மூச்சுத்திணறலால் உயிரிழந்த இரண்டு பெண்களின், ரத்த மாதிரிகள் பரிசோதனை முடிவில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க பெண் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதேபோன்று ஆவடியைச் சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க பெண் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவர்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். முன்னதாக இவர்களது ரத்த மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்காக அனுப்பப்பட்டிருந்தன. அந்த முடிவுகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில், இருவருக்கும் கொரோனா வைரஸ் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.