பைக் வாங்கலையோ பைக்கு: தாராள தள்ளுபடியில் நிறுவனங்கள்
ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் பிஎஸ் 3 தரத்திலான வாகனங்களை விற்பனை செய்ய முடியாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து இரு சக்கர வாகன உற்பத்தியாளர்கள், தங்கள் வசம் உள்ள வாகனங்களை விற்பனை செய்ய, அதிக அளவு தள்ளுபடியை அறிவித்துள்ளனர்.
ஹீரோ மோட்டர் கார்ப், ஹோண்டா, பஜாஜ் மற்றும் சுஸூகி ஆகிய நிறுவனங்கள் பிஎஸ் 3 தரத்திலான வாகனங்களின் மீது 22 ஆயிரம் ரூபாய் வரையில் தள்ளுபடி அளித்துள்ளனர். ஹோண்டா நிறுவனம் முதலில் 10 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி அளித்தது. பின்னர் 22 ஆயிரம் ரூபாய் கேஷ்பேக் அளிப்பதாக அறிவித்தது. ஹோண்டா நிறுவனத் தயாரிப்புகளான ஆக்டிவா 3ஜி, டிரீம் யுகா, சிபி ஷைன் மற்றும் சிடி 110 டிஎக்ஸ் ஆகிய வாகனங்களின் மீது இந்த தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. இரண்டு சக்கர வாகன விற்பனையில் முதலிடத்தில் இருக்கும் ஹீரோ நிறுவனம் தனது பிஎஸ் 3 ரக வாகனங்களுக்கு, 12 ஆயிரத்து 500 ரூபாய் வரை தள்ளுபடி அளித்துள்ளது. ஸ்கூட்டர் வகைகளுக்கு 12,500 ரூபாயும், பிரிமீயம் பைக்குகள் மீது ஏழாயிரத்து 500 ரூபாயும் தள்ளுபடி அளிக்கப்படுகிறது.
டூயட், மேஸ்ட்ரோ எட்ஜ் ஆகிய ஸ்கூட்டர்கள் மீதும், கிளாமர், ஸ்பெலண்டர் 125 ஆகிய பைக்குகள் மீதும் இந்த தள்ளுபடி வழங்கப்படுகிறது.
சுஸுகி மோட்டர் நிறுவனம் தனது லெட்ஸ் ஸ்கூட்டர் மீதும், ஜிக்ஸர் பைக்குகள் மீதும் தள்ளுபடியை அறிவித்துள்ளது. லெட்ஸுக்கு 4 ஆயிரம் ரூபாயும், ஜிக்ஸருக்கு 5 ஆயிரம் ரூபாயும் தள்ளுபடி அளிக்கப்படுகிறது. ஹெல்மெட் இலவசம் எனவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது பைக் வகைகளின் மீது 3000 ரூபாய் முதல் 12 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி அறிவித்ததுடன் இன்சூரன்ஸ் இலவசம் என்றும் தெரிவித்துள்ளது. இந்த தள்ளுபடிகளுக்குப் பிறகும் வாகனங்கள் எஞ்சியிருந்தால் அவை ஏற்றுமதி செய்யப்படும் என பஜாஜ் கூறியுள்ளது.
முன்பு எப்போதும் இல்லாத அளவு தள்ளுபடி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து வாகன விற்பனை மையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. சுமார் 8 லட்சம் வாகனங்கள் பிஎஸ் 3 தரத்துடன் இருப்பதாக வாகன உற்பத்தியாளர்கள் கூறியுள்ளனர்.