இனி சென்னை சென்ட்ரல் முதல் ஏர்போர்ட் வரை மெட்ரோவில் பயணிக்கலாம் !
சென்னைவாசிகள் இன்று முதல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து விமான நிலையத்துக்கு மெட்ரோ ரயிலில் பயணம் செய்யலாம். மேலும் சின்னைமலையில் இருந்து - தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வரையும் கூட மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொள்ளலாம். ஆம், சென்னை சென்ட்ரல் முதல் நேரு பூங்கா மற்றும் டி.எம்.எஸ்.-லிருந்து சின்னமலை வரையிலுமான சுரங்கப்பாதை வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கிவைக்கிறார். சென்னையில் ரூ.20 ஆயிரம் கோடி செலவில் 45 கிலோ மீட்டர் தூரத்துக்கான மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 22 கிலோ மீட்டர் தூரத்துக்கு உயர் நிலைப் பாதையிலும், 23 கிலோ மீட்டர் தூரத்துக்கு சுரங்கப் பாதையிலும் மெட்ரோ பணிகள் நடைபெற்று வருகின்றன.
இப்போது, சென்னை விமான நிலையம் முதல் எழும்பூர் நேரு பூங்கா வரை மெட்ரோ ரயில் பயணிகள் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. சைதாப்பேட்டை - தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வரையில் மெட்ரோ ரயில் சுரங்கப் பணிகள் கடந்த 3 ஆண்டுகளாக இரவு பகலாக நடைபெற்றன. இப்போது இப்பணிகள் நிறைவு பெற்றுள்ளன. சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் வரையிலான இந்த வழித்தடத்தில் சைதாப்பேட்டை, நந்தனம், தேனாம்பேட்டை, டி.எம்.எஸ். ஆகிய 4 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து சின்னமலை - டி.எம்.எஸ். இடையிலான மெட்ரோ ரயில் போக்குவரத்தும் இன்று தொடங்குகிறது.
இதனையடுத்து இன்று முதல் சென்னை சென்ட்ரலில் இருந்து விமான நிலையத்துக்கு பயணிகள் நேரடியாக சென்று வரலாம். அதேநேரத்தில் சைதாப்பேட்டை மார்கமாக செல்ல விரும்பும் பயணிகள், விமான நிலையத்தில் இருந்து ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இறங்க வேண்டும். பின்பு, டி.எம்.எஸ். மார்கமாக செல்லும் மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய வேண்டும். சென்னை சென்ட்ரலில் இருந்து விமான நிலையம் வரை செல்ல அதிகபட்ச கட்டணமாக ரூ.70 நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.