வீடு புகுந்து திருடிய இரண்டு இளைஞர்களை பிடித்து உதைத்த பெண்
திருப்பூரில் பட்டப்பகலில் வீடு புகுந்து திருடிய இரு இளைஞர்களை பெண் ஒருவர் தனியாக அடித்து, கட்டி வைத்து போலீஸாரிடம் ஒப்படைத்தார்.
திருப்பூர் பாண்டியன் நகர், ரேசன் கடை வீதியை சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மனைவி கஸ்தூரி. இவர் வீட்டின் எதிர்புறம் உள்ள அம்மா உணவகத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பூட்டியிருந்த கஸ்தூரி வீட்டில் இன்று மதியம் 3 மணியளவில் இரண்டு வாலிபர்கள் புகுந்து, பீரோவை உடைத்து அதிலிருந்த 5 பவுன் நகை, 8000 பணம் ஆகியவற்றை திருடி கொண்டிருந்தனர்.
அப்பொழுது வீடு திறந்து இருப்பதை கண்டு அங்கு சென்ற கஸ்தூரி, திருடி கொண்டிருந்த வாலிபர்களை அங்கு இருந்த தடியினை கொண்டு தாக்கி சத்தமிட்டுள்ளார். அக்கம்பக்கத்திலிருந்தவர்கள் ஓடி வந்து திருடர்களை கட்டி வைத்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வாலிபர்களிடம் விசாரித்ததில், இருவரும் தேனி மாவட்டத்திலுள்ள மங்களமேடு பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்றனர். பெண் ஒருவர் திருடர்களை தனியாக அடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.