துப்பாக்கி உரிமம் கேட்டு கோவை ஆட்சியரிடம் மனு கொடுத்த சகோதரிகள்..!
பெண்களுக்குப் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாகவும், எனவே தங்களை தற்காத்துக் கொள்ள துப்பாக்கி உரிமம் வழங்கக் கோரியும் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் சகோதரிகள் இருவர் மனு அளித்துள்ளனர்.
பொள்ளாச்சியில் இளம்பெண்களை மிரட்டி ஆபாச படமெடுத்த விவகாரம், தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கடந்த 13ஆம் தேதி விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி காவல்துறையினர், ஏராளமான தகவல்களைத் திரட்டி வருகின்றனர். இந்த விவகாரத்தில் பலருக்கும் தொடர்பு இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. அரசியல் தலைவர்கள், பொதுமக்கள், நடிகர்கள் எனப் பலரும் பொள்ளாச்சி சம்பவத்திற்கு தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் பெண்களுக்குப் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாகவும், எனவே தங்களை தற்காத்துக் கொள்ள துப்பாக்கி உரிமம் வழங்கக் கோரியும் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் சகோதரிகள் இருவர் மனு அளித்துள்ளனர். கோவையை அடுத்த நல்லாம்பாளையத்தைச் சேர்ந்த சகோதரிகளான, கல்லூரி மாணவி தமிழ்ஈழம் மற்றும் பள்ளி மாணவி ஓவியா ஆகியோர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் இந்த மனுவை அளித்துள்ளனர்.
அதில், பெண்களுக்கான பாதுகாப்பை அரசு உறுதி செய்யவில்லை எனவும் இதனால்தான் தங்களை தற்காத்துக் கொள்ள வேறு வழியில்லாமல் துப்பாக்கி வைத்து கொள்ள உரிமம் கேட்பதாக தெரிவித்துள்ளனர். இது போன்ற சம்பவங்கள் தங்களுக்கு மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் மாணவிகள் கூறியுள்ளனர்.