மண்ணுக்குள் சிக்கிய தொழிலாளர்கள்: ஒருமணி நேர போராட்டத்திற்கு பின் உயிருடன் மீட்பு
சாயல்குடி அருகே கிணறு தோண்டும்போது மண் சரிவில் சிக்கிய இருவர், ஒருமணி நேர போராட்டத்திற்கு பின் உயிருடன் மீட்கப்பட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே தொழிலாளர்கள் கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக மண் சரிவு ஏற்பட்டிருக்கிறது. இதில் இரண்டு தொழிலாளர்கள் மண்ணுக்குள் சிக்கினர். அதில் ஒருவர் பெண் தொழிலாளி.
இதனையடுத்து மண்ணுக்குள் மூழ்கிய தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. மண்வெட்டியால் தோண்டும்போது, மண்ணுக்குள் சிக்கியுள்ளவர்களின் உடலில் ஏதேனும் காயம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, அதற்கேற்றாற்போல் மண் தோண்டப்பட்டது. ஏராளமான தொழிலாளர்கள், மண்ணுக்குள் சிக்கிய இருவரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். கிட்டத்தட்ட ஒருமணி நேரத்திற்கு பின் மண்ணுக்குள் சிக்கிய மாரிக்கனி, சண்முகம் ஆகிய இருவரும் மீட்கப்பட்டனர். இதனையடுத்து அவர்களை தீயணைப்புத்துறையின் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.