தமிழ்நாடு
திருப்பூர்: காரில் மது பாட்டில்கள் கடத்தப்பட்ட விவகாரம்; 2 காவலர்கள் சஸ்பெண்ட்
திருப்பூர்: காரில் மது பாட்டில்கள் கடத்தப்பட்ட விவகாரம்; 2 காவலர்கள் சஸ்பெண்ட்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மதுபாட்டில்கள் கடத்தல் தொடர்பாக இரண்டு காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
கொரோனா பாதிப்பு குறையாததால் திருப்பூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை. இதனால் மது;அருகில் உள்ள திண்டுக்கல் மாவட்டத்திற்கு சென்று மது வாங்கி வருகின்றனர். சிலர் மொத்தமாக மது பாட்டில்களை வாங்கி வந்து கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்று வருகின்றனர். இதனை அடுத்து மாவட்ட எல்லைப் பகுதிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்றிரவு பல்லடம்-தாராபுரம் சாலை கள்ளிப்பாளையம் சோதனை சாவடியில் காமநாயக்கன் பாளையம் போலீசார் வாகனங்களை நிறுத்தி சோதனை மேற்கொண்டு வந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சொகுசு கார் ஒன்று சோதனை சாவடியில் நிற்காமல் சென்றது. அதிவேகமாக சென்ற கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. காரில் இருந்தவர்கள் தப்பி ஓடினர்.
அங்கு வந்த காவல்துறையினர் காரை சோதனை செய்தபோது, நூறுக்கும் மேற்பட்ட மது பாட்டில்களும், பல்லடம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலரின் அடையாள அட்டையும் இருந்தது. அதனை தொடர்ந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்த காமநாயக்கன் பாளையம் போலீசார் பல்லடம் மற்றும் மங்கலம் காவல் நிலையத்தில் பணிபுரியும் முத்துச்சுருளி, துரைமுருகன் என்ற 2 காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் சம்பந்தப்பட்ட 2 காவலர்களையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் உத்தரவிட்டுள்ளார்.

