வியாபாரியை மிரட்டி 80 ஆயிரம் ரூபாயை பறித்த 2 காவலர்கள் சஸ்பெண்ட்
சென்னை திருவல்லிக்கேணியில் வியாபாரியை மிரட்டி பணம் பறித்ததாக எஸ்.ஐ, மற்றும் தலைமைக் காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை திருவல்லிக்கேணியில் வசித்துவரும் ஷாகுல் ஹமீது என்பவர், வெளிநாடுகளிலிருந்து வாங்கிவரும் பொருட்களை விற்பனை செய்து வருகிறார். சில நாட்களுக்கு முன் இவரின் குடோனுக்குச் சென்ற திருவல்லிக்கேணி உதவி ஆய்வாளர் ராஜசேகர், தலைமைக் காவலர்கள் ஆனந்தராஜ், அசோக்குமார் மற்றும் சன்னிலாயிடு ஆகியோர் திடீர் சோதனை நடத்தியுள்ளனர். அங்கிருந்த 90 லேப்டாப்கள், 500 செல்ஃபோன்கள், 30 கிராம் தங்கம், வெளிநாட்டு சாக்லேட் மற்றும் விளையாட்டுப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.
சாகுல் அமீதை கைது செய்த அவர்கள், காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லாமல், லாட்ஜ் ஒன்றுக்கு அழைத்துச் சென்று பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இறுதியில் ஷாகுலிடம் 80 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டு அவரை விடுவித்ததாக தெரிகிறது.
இதுகுறித்து புகாரில் விசாரணை நடத்திய உயரதிகாரிகள், உதவி ஆய்வாளர் ராஜசேகர் உள்பட 3 தலைமைக் காவலர்களையும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்தனர். இந்நிலையில், பணம் பறிப்பில் ஈடுபட்ட நால்வரை சஸ்பெண்ட் செய்து கிழக்கு மண்டல இணை ஆணையர் ஜெயகவுரி உத்தரவிட்டார்.