திருவாரூரில் சாதிய வன்கொடுமை செய்ததாக இருவர் கைது
மன்னார்குடி அருகே மாற்று சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வாயில் மலத்தை திணித்து சாதிய வன்கொடுமை செய்ததாக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள திருவண்டுதுறை கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ்,(பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). மாற்று சமூகத்தை சேர்ந்த இவர் கடந்த 28 ஆம் தேதி அன்று அதிகாலை தனது செங்கல் காள்வாய்க்கு சென்று வரும்போது, எதிரே வந்த அதே கிராமத்தைச் சேர்ந்த வேறொரு சமூகத்தைச் சேர்ந்த சக்திவேல், ராஜேஷ், ராஜ்குமார் ஆகிய மூவரும் சேர்ந்து தன்னை தாக்கியதாகவும், மரத்தில் கட்டிவைத்து தனது வாயில் மலத்தையும், சிறுநீரையும் ஊற்றியதாகவும் குறிப்பிட்டு கோட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் கடந்த 5 வருடத்திற்கு முன்னர் நடைபெற்ற கோவில் திருவிழாவில் ஏற்பட்ட வன்முறையை மனதில் வைத்து தன்னை கொடுமைப்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்ப்டையில், வழக்கு பதிவு செய்த கோட்டூர் காவல்துறையினர், சாதிய வன்கொடுமை சட்டம் உட்பட 5 பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட சக்திவேல் மற்றும் ராஜேஷ் என்பவரை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் ராஜ்குமார் என்பவரை தேடி வருகின்றனர்.