சென்னை ஆலந்தூர் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ரியல் எஸ்டேட் அதிபர் எரித்து கொல்லப்பட்டது தொடர்பாக இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஆலந்தூர் எம்.கே.என் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் முதல் தளத்தில் பண்ருட்டியை சேர்ந்த முகமது சுல்தான் என்பவர் வசித்து வந்துள்ளார். ரியல் எஸ்டேட் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை வாங்கி விற்கும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை அவரது வீட்டில் இருந்து கரும்புகை வர துவங்கியுள்ளது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் சிலாப் மீது ஏறி நாற்காலி போட்டு தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயற்சித்தனர். ஆனால் தீயை கட்டுப்படுத்தமுடியாததால் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் ராஜ்பவனில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
வீடு பூட்டப்பட்டிருந்தது. சம்பவ இடத்திற்கு பரங்கிமலை போலீசார் வந்து வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டினுள் கருகிய நிலையில் கை, கால்கள் கம்பியால் கட்டப்பட்டு வயிற்றில் கத்தியால் குத்தப்பட்டு மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொடூரமாக கொன்று விட்டு வீட்டையும் பூட்டி விட்டு சென்றிருக்கின்றனர். போலீசார் மேற்கொண்ட விசாரணையில் எரித்து கொலை செய்யப்பட்டவர் முகமது சுல்தான் என்பதும் இவர் பண்ருட்டியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இவர் ரியல் எஸ்டேட் வேலையும், எலக்ட்ரானிக் சாதனங்கள் வாங்கி வந்து ரிச்சி தெருவில் விற்று வந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். இவரை எரித்து கொடூரமாக கொலை செய்தது அவரது வீட்டில் கடந்த ஒன்னறை ஆண்டாக வேலை செய்து வந்த ரேனியா பானு வின் ஆண் நண்பர் இமான் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
முகமது சுல்தான் ரேனியா பானுவிடம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்ததாகவும் இதனை பானு இமானிடம் கூறவே ஆத்திரத்தில் இமான் சுல்தானை கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர். கொலை செய்து விட்டு இராமேஸ்வரம் சென்று தலைமறைவானவரை தனிப்படை போலீசார் கைது செய்து அழைத்து வந்தனர். இருவரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்து பரங்கிமலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.