மின் வேலியில் சிக்கி பரிதாபமாக இருவர் உயிரிழப்பு – ஆம்பூரில் சோகம்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கன்னிகாபுரத்தைச் சேர்ந்தவர் ஜெயகுமார். இவர் அதே பகுதியில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் ஜெயகுமார் குத்தகைக்கு எடுத்த நிலத்தில் பயிரிடப்பட்ட பயிர்களை வன விலங்குகள் சேதப்படுவதாகக் கூறி, ஜெயகுமாரும் அவரது மைத்துனரான வெங்கடேசன் என்பவரும் சேர்ந்து வன விலங்குகளை விரட்ட நிலத்திற்குச் சென்றுள்ளனர்.
அப்பொழுது எதிர்பாராதவிதமாக ராமமூர்த்தி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில், வன விலங்குகளை விரட்ட அவரால் வைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி ஜெயகுமார் மற்றும் வெங்கடேசன் ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையறிந்த அவரது உறவினர்கள் உடனடியாக ஆம்பூர் நகர காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர், தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.