Accused
Accusedpt desk

பல்லடம்: வடமாநிலத்தவர் என நினைத்து நேபாள இளைஞரை தாக்கிய ரவுடி கும்பல்!

காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காமல் தாமதித்து வருவதாக பாதிக்கப்பட்ட நேபாள இளைஞர் புகார் கூறியுள்ளார்.
Published on

நேபாளைச் சேர்ந்த குஷால் என்பவர், தனது மனைவி ஜெசி மற்றும் மகன்கள் யாசர் அராபத், ரியாஸ் ஆகியோருடன் கடந்த மூன்று மாதங்களாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் செந்தில் நகரில் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 15 ஆண்டுகளாக பல்லடத்தில் தங்கி பணிபுரிந்து வந்த குஷால், தற்போது வேலை தேடி வருகிறார்.

Nepal Youth
Nepal Youthpt desk

இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த வீரமணி மற்றும் அன்புமணி ஆகிய இருவரும், "உனக்கு வேலை வாங்கித் தருகிறோம். வடமாநில இளைஞர்களை எங்களிடம் அழைத்து வா" என குஷாலைத் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளனர். இதற்கு , "நான் நேபாள நாட்டைச் சேர்ந்தவன். வடமாநில தொழிலாளர்கள் யாரையும் எனக்குத் தெரியாது" என குஷால் தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அன்புமணி மற்றும் வீரமணி , குஷாலின் வீட்டுக்குள் புகுந்து அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் குஷாலின் இருசக்கர வாகனத்தையும் திருடிச் சென்றுள்ளனர். இதில், படுகாயமடைந்த குஷாலை மீட்ட அவரது மனைவி, பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். இச்சம்பவம் குறித்து பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தனக்கும் தனது குடும்பத்தினரின் உயிருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளதாக குஷால் தெரிவித்துள்ளார்.

குஷால்
குஷால்pt desk

மேலும் தாக்குதலில் ஈடுபட்ட அன்புமணி மற்றும் வீரமணி ஆகியோர் மீது ஏற்கெனவே பல்லடம் காவல் நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்போவதாக வைரலான வீடியோ குறித்த வழக்கும், வழிப்பறி மற்றும் அடிதடி வழக்குகளும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷஷாங் சாய் அவர்களிடம் கேட்டபோது, உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் தாக்குதலில் ஈடுபட்ட அன்புமணி மற்றும் வீரமணி ஆகிய இருவர் மீதும், அடிதடி, கொலை மிரட்டல், ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் பல்லடம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com